மைத்திரியின் செயல் வெறுக்கத்தக்கது! பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மஹிந்தவை பிரதமராக ஏற்கவே முடியாது!! – சபாநாயகர் திட்டவட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 7ஆம் திகதி கூட்டுவதாக ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் அவர் அதனை மீறியுள்ளார் என்வும் சபாநாயகர் குற்றம்சாட்டியுள்ளார்.

சபாநாயகரால் இன்று விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாடு குழப்பநிலையை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், இதுவரை காலமும் மௌனித்து இருந்த போதிலும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும் மனச்சாட்சியின்படி செயற்படுவதும் எனது தேசிய பொறுப்பு என்பதை நினைவுகூருகின்றேன்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசமைப்புக்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்தும் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன் என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என நான் உணர்கின்றேன்.

நாடாளுமன்றத்தை சட்டரீதியாகக் கூட்டுவதற்கு இடமளிக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பறித்துள்ளதாக பெரும்பாலானோர் தெரிவிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நியாயத்தின் அடிப்படையில் எனது நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைப்பது அவசியமாகும்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசமைப்புக்கு முரணான, சம்பிரதாயத்திற்கு விரோதமானது எனப் பெரும்பாலானோரின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில் புதிதாக ஒருதரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான இயலுமை கிடைக்கும் வரை முன்னைய நிலையை ஏற்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக சமூகத்தில் இடம்பெறக்கூடாத இந்தச் சம்பவம், ஆயுதமின்றி மேற்கொள்ளப்பட்ட வெறுக்கத்தக்க செயல் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஜனாதிபதி என்னிடம் வாய்மூலம் தெரிவித்த வாக்குறுதிக்கமைய நடவடிக்கைகைளை முன்னெடுப்பாராயின் எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டி, நாட்டை நிலைப்படுத்துவது சபாநாயகர் என்ற ரீதியில் எனது கடமை, என்பதால், ஜனாதிபதி இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதும் அவரது கடமையாகும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *