ஜனநாயகத்துக்கு எதிரான சதித்திட்டங்களை சபையில் ஓரணியில் நின்று தோற்கடிப்போம்! கூட்டமைப்பு – ஜே.வி.பி. தலைவர்கள் தெரிவிப்பு!!

“நாட்டில் பிரதமர் நீக்கம் மற்றும் புதிய பிரதமர் நியமனம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியல் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது. அரசமைப்பு மீறப்பட்டுள்ளமை காரணமாக நாட்டின் ஜனநாயகமும், மக்களின் இறையாண்மையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்புக்குப் புறம்பாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்ப்பதற்கோ எம்மால் ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே, ஜனநாயகத்துக்கு முரணான சதித்திட்டங்களை நாடாளுமன்றத்தில் ஓரணியில் நின்று தோற்கடிக்க நாம் முடிவெடுத்துள்ளோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவருடன் அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும், ஜே.வி.பியின் தலைவருடன் பிமல் ரத்நாயக்க எம்.பி. மற்றும் கே.டி.லால் காந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி.,

“கடந்த 26ஆம் திகதி இந்நாட்டில் நடைபெற்றது அரசியல் ரீதியிலான சதித்திட்டமாகும். ஒரு சூழ்ச்சித் திட்டத்தின் மூலமாக புதிய அரசொன்றை அமைப்பதற்கோ அல்லது அரசைக் கவிழ்ப்பதற்கோ நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற செயற்பாட்டினால் ஏற்பட்ட ஜனநாயக மீறல் காரணமாக நாட்டின் மக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக வடக்கு மக்களும், அரசியலில் ஈடுபடுபவர்கள் என்ற வகையில் நாங்களும் ஜனநாயக மீறலின் காரணமாக ஏற்படத்தக்க பின்விளைவுகளுக்கு முகங்கொடுத்திருந்தோம்.

எனவே, ஜனநாயகம் எங்கே கேள்விக்குறியாக்கப்பட்டாலும், எவ்வித செயற்பாடுகளால் ஜனநாயகம் பாதிப்புக்குட்பட்டாலும் அப்போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு முன்னிற்க நாம் தயாராகவுள்ளோம்.

ஜனநாயகத்துக்கு முரணான சதித்திட்டங்களை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமையுடன் ஓரணியில் நின்று தோற்கடிக்க நாம் முடிவெடுத்துள்ளோம்” – என்றார்.

கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் பிரதமரை ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்ய முடியாது. இந்நிலையில், பிரதமர் பதவி நீக்கம் மற்றும் புதிய பிரதமர் நியமனம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியல் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது. இது உள்நாட்டில் இருப்பவர்களை மட்டுமன்றி சர்வதேச சமூகத்தினரையும் கடும் சீற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

அரசமைப்பு மீறப்பட்டுள்ளமை காரணமாக நாட்டின் ஜனநாயகமும், மக்களின் இறையாண்மையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

நாட்டின் அரசமைப்புக்குப் புறம்பாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்ப்பதற்கோ எம்மால் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் எம்முடன் அமர்ந்திருக்கும் ஜே.வி.பியினருக்கும் எமக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, ஜனநாயகத்துக்கு முரணான சதித்திட்டங்களை நாடாளுமன்றத்தில் ஓரணியில் நின்று தோற்கடிக்க நாம் முடிவெடுத்துள்ளோம்.

இது ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் சார்பாக நாம் ஆற்ற வேண்டிய கடமை. அந்தக் கடமையிலிருந்து நாம் தவறமாட்டோம்.

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் கேவலமான நடவடிக்கை தற்போது நடைபெறுகின்றது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாம் ஓரணியில் நின்று எதிர்க்கின்றோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *