ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் மஹிந்தவை ஆதரியோம்! மாவீரர்களின் தியாகத்துக்கு ஒருபோதும் துரோகம் செய்யோம்!! – சிறிதரன் எம்.பி. சத்தியம்

“ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை” என்று தெரிவித்த கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், “இந்த மண்ணிலே நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மானமாவீரர்களுக்கும் அவர்களின் தியாகத்துக்கும் நாம் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டோம்” என்றும் உறுதியளித்தார்.

சாவகச்சேரியில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“தமிழர்கள் இந்த மண்ணிலே ஓர் இலட்சியம் நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இலட்சியத்துக்காக ஆயிரமாயிரம் வேங்கைகளை விதை ஆக்கியவர்கள் நாங்கள்.

இலங்கையில் இருக்கின்ற எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க ஆனாலும் சரி, மஹிந்த ராஜபக்‌ஷ ஆனாலும் சரி எமது இனத்தை எந்த வகையிலும் அடக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

எமது கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், மஹிந்த ராஜபக்‌ஷவிடம் சென்று எங்கள் உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை எழுத்துமூலம் தந்தால் எமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலாம் எனத் தெரிவித்தார். அதனை மஹிந்த மறுத்துவிட்டார்.

ஆட்சிக்கு வரத் துடிக்கும் எந்தவொரு ஆட்சியாளர்களும் எமக்கான அதிகாரத்தைத் தருவதற்குத் தயாராக இல்லை. தந்தை செல்வா அறவழியில் போராட்டம் முன்னெடுக்கின்றபோது, இறுதியில் தந்தை செல்வா, “தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்னபோது எமது தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு வயது 16.

தந்தை செல்வாவுக்குத் தெரியாது பிரபாகரன் 30 வருடங்களாக தமிழர்களுடைய போராட்டத்தை கொண்டு செல்வார் என்று. ஆனாலும், போராட்டம் மௌனித்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் பயணத்தை கொண்டு செல்கிறது. அதனை அடைவதற்காக முயற்சி செய்கிறது.
நாம் வாழவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மாவீரர்களுக்கு ஒருபோதும் நாம் துரோகம் இழைக்கமாட்டோம்.

ஆனால், தமிழர்களின் போராட்ட வரலாற்றிலே துரோகங்கள் ஒன்றும் புதியவையல்ல. ஆனாலும், தமிழர்கள் மொழி ரீதியாக தமிழ் மக்களுடைய வேணவாக்களை அடியோடு மறுக்கும், ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை.
இன ரீதியாக அடையாள ரீதியாக இன்னமும் அடக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் என்கின்ற உண்மையை எவரும் மறந்துவிட முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *