ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவோம்! – இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

இலங்கை தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம், சிந்திக்க வேண்டி நிலை ஏற்படும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே எச்சரித்துள்ளார்.

‘ரொய்ட்டர்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,

“இலங்கை அரசு சில வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றது.

இந்த அர்ப்பணிப்புகளை நிறைவேற்றாவிட்டால், நாங்கள் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும்.

பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில், மனித உரிமைகள் விடயத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமா என்ற சந்தேகம் உள்ளது.

நல்லிணக்கம் தொடர்பான அவரது கொள்கை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் இணங்கிக் கொள்ளப்பட்ட ஒன்றாக அது இருக்காது என்று நான் அஞ்சுகிறேன்” – என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதிய பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தைப் பெற முடியவில்லை. எனினும், அவரது மகன் நாமல் ராஜபக்ஷ எம்.பி. கருத்து வெளியிடுகையில், “நல்லிணக்கம் உள்ளது. எப்போதும் அது எங்களின் கவனத்துக்குரியதாக இருக்கும். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை திரும்பப் பெறுவது பற்றிய கரிசனைகள் இருந்தால், அது ஆதாரமற்றது, தவறானது” என்று கூறினார்.

87 பில்லியன் டொலர் இலங்கையின் பொருளாதாரத்தில், ஐரோப்பிய ஏற்றுமதிச் சந்தை மிகவும் முக்கியமானது என்று இராஜததந்திரிகள் தெரிவித்தனர். 2017இல் இலங்கையின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கே மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

2017இல் இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீளப் பெற்ற பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அதன் ஏற்றுமதி 18 18 வீதம் அதிகரித்தது என்றும், மீன் ஏற்றுமதி 100 வீதம் அதிகரித்தது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *