5ஆம் திகதி நாடாளுமன்று கூடுமா? மெளனம் காக்கிறார் மைத்திரிபால! – சபாநாயகர் நாளை முக்கியத்துவமிக்க சந்திப்பு

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதி திங்களன்று கூட்டுவது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றிரவு அறிவித்தது.

அதேவேளை, சபாநாயகர் செயலகமும் கூட, நாடாளுமன்றத்தைக் கூட்டும் திகதி பற்றி இன்னமும் தமக்குத் தகவல் ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 05ஆம் திகதி அல்லது 07 ஆம் திகதி கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டபோதிலும், இறுதியான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் சபாநாயகரின் செயலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டவுள்ளார் என்று ஜனாதிபதி தனக்குத் தெரியப்படுத்தியுள்ளார் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று புதன்கிழமை காலை கூறியிருந்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

ஆயினும், நாடாளுமன்றத்தைத் திங்களன்று கூட்டுவது தொடர்பாக, ஜனாதிபதி இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன், நான்கு கட்சிகளின் தலைவர்கள் நாளை வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் தலைவர்களே நாளை சபாநாயகரைச் சந்திக்கவுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நாளை முற்பகல் 10 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுப் புதன்கிழமை நடத்திய சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சித் தலைவர்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *