ரணிலை மீண்டும் பிரதமராக்கக் களமிறங்கியுள்ளது மேற்குலகம்! – அது சாத்தியப்பட்டால் ஜனாதிபதி பதவியை உடன் துறப்பேன் என மைத்திரி சபதம்

“ரணில் விக்கிரமசிங்க செய்த துரோகத்தின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தேன். ஆனால், மேற்குலகம் ரணிலை மீண்டும் பிரதமராக்கும் சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ரணில் மீளவும் பிரதமராக பதவி வகித்தால் ஒரு மணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நான் நீடிக்கமாட்டேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக அமைப்பாளர்களுக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, புதிய அரசை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி மிகவும் கடுமையான ஒரு நடவடிக்கையை அன்று எடுத்திருந்தேன். இன்று நான் எடுத்துள்ள நடவடிக்கை அதனை விடவும் வலுவானது. நாட்டையும் நாட்டு மக்களையும் கருத்தில்கொண்டே இந்தத் தீர்மானம் எடுத்துள்ளேன்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அரசியல் சாசனத்தை காண்பித்து ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவி வழங்குமாறு கோரியிருந்தார். அரசியல் சாசனத்தின் குறிப்பிட்ட சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கும் வழங்குமாறும் கோரியிருந்தார். இது தொடர்பான ஆவணமொன்றில் கையொப்பமிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பிரதமரை நியமிக்க முடியும் என்ற போதிலும் எனது அதிகாரங்களைப் பிரதமரிடம் வழங்க முடியாது என நான் எழுத்து மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியை ஏற்றவுடன் அவர் ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் எனவும், தாம் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கடமையாற்றுவதாகவும் ஐ.தே.கவின் குறிப்பிட்ட உறுப்பினர் கூறினார்.

இந்தநிலைமையை நீடிக்க விடக்கூடாது என்ற காரணத்தினால் மஹிந்த ராஜபக்ஷவை நான் புதிய பிரதமராக நியமித்தேன்” – என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *