ஜனாதிபதி – சபாநாயகர் இன்று நேரடிச் சந்திப்பு! அரசமைப்புக்கிணங்க ரணிலே பிரதமர் என்று கரு திட்டவட்டம்; 16 இற்கு முன் நாடாளுமன்றத்தைக் கூட்ட மைத்திரி நடவடிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணியிலிருந்து 6 மணிவரை நடைபெற்ற ஒரு மணிநேர சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்தும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இது பற்றி பேசி இறுதி முடிவை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“சபாநாயகர் அனைவருக்கும் பொதுவானவர். ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது அரசியல் ரீதியில் சார்பு கொண்டவராகவோ அவர் இருக்கக்கூடாது . அதேபோல் வெளிச்சக்திகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப உள்நாட்டு விடயங்களை நாங்கள் தீர்மானிக்க முடியாது . அரசமைப்பின்படியே நான் செயற்பட்டேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றும் இந்தச் சந்திப்பில் சபாநாயகரிடம் ஜனாதிபதி தெரிவித்தார் என அறியமுடிகின்றது.

ஆனால், சபாநாயகரும் இதன்போது பதிலடி கொடுத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

“என்னை சபாநாயகராகத் தெரிவு செய்தது நாடாளுமன்றமே. நான் அரசியல் கட்சிகளுக்கோ சார்பாகவோ அல்லது வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்படமாட்டேன். நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் – அரசமைப்புக்கு இணங்க நான் செயற்படுவேன். தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் பதவியில் நீடிக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷதான் பிரதமர் என்றால் நாடாளுமன்றத்தை உடன் கூட்டி அவருக்கான பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம். எனவே, நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பது நாட்டுக்கு அழகல்ல” என்று இதன்போது ஜனாதிபதியிடம் சபாநாயகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார் என அறியமுடிகின்றது.

இந்நிலையில், பெரும்பாலும் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் அதாவது எதிர்வரும் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டில் நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடும் எனவும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *