யாருக்கு ஆதரவளிப்பதென கூட்டமைப்பு முடிவில்லை! – தமிழ் மக்கள் நலன் சார்ந்து தீர்மானம் என்கிறார் சம்பந்தன்

நாட்டின் பிரதமராக யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்குள்ளும் உருவெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

கூட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும், இறுதியில் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் ஒருமித்து தீர்க்கமான முடிவெடுப்பார்கள் எனவும், அந்த முடிவு தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாகவே அமையும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ‘புதுசுடர்’ இணையத்தளத்திடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் யார் பிரதமர் என்ற சர்ச்சை நீடித்துள்ள நிலையில் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை யார் காட்டப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் என்னுடன் சேர்த்து 11 எம்.பிக்கள் பங்கேற்றார்கள். செல்வம் அடைக்கலநாதன், வியாழேந்திரன், துரைரெட்ணசிங்கம் ஆகிய எம்.பிக்கள் நாடாளுமன்ற விஜயமாக கனடா சென்றமையால் இன்னமும் நாடு திரும்பவில்லை. சரவணபவன் எம்.பி. போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதத்தால் கூட்டத்துக்கு உரிய நேரத்துக்கு சமுகமளிக்க முடியாமல் போய்விட்டது. சிவசத்தி ஆனந்தன் எம்.பியும் சமுகமளிக்கவில்லை.

நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிவரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் நான் தனித்தனியாக நடத்திய சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை எடுத்துரைத்தேன்.

இறுதியில் யாரை ஆதரிப்பது என்ற விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற எம்.பிக்கள் தத்தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர். இருப்பினும் கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. கூட்டம் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் அனைவரும் ஒருமித்து தீர்க்கமான முடிவெடுப்போம். தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாகவே அந்த முடிவு அமையும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *