மைத்திரியின் செயல் கீழ்த்தரமானது – மௌனம் கலைத்து ரணில் ஆவேசப் பேச்சு!

மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக்கொடுப்பதென்பது கீழ்த்தரமான செயலாகும் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

2015 ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சிமாற்றத்துக்கு பின்னர்-  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாக விமர்சிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டக் கோரியும், கொழும்பில் ஐதேக இன்று பாரிய பேரணியை நடத்தியது.

கொழும்பு லிபேர்ட்டி சுற்றுவட்டத்தில் ஆரம்பித்த இந்தப் பேரணியில், பல்லாயிரக்கணக்காக ஐதேக ஆதரவாளர்களும், அதன் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க கூறியவை வருமாறு,

” மக்கள் வழங்கிய ஆணையையும், மக்கள் வைத்த நம்பிக்கையையும் காட்டிக்கொடுப்பதென்பது கீழ்த்தரமான செயற்பாடாகும். அத்தகையதொரு செயலை செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

ஜனநாயகத்தை ஏற்படுத்தி நல்லாட்சியொன்றை மலரச்செய்வதற்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம். பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கவும் முடிவெடுத்தோம்.

இதையடுத்து மஹிந்த பக்கமிருந்தவர்களும் எமக்கு ஆதரவளித்தனர். சந்திரிக்காவினதும், ஜே.வி.பியினதும் கோரிக்கையை பரீசிலித்து மைத்திரியை பொதுவேட்பாளராக போட்டியிடவைக்க தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சி சம்மேளனத்தில் இதற்கான யோசனையை முன்வைத்து, வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் கடமையாற்றினோம்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக எமக்கு சிறைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. உயிர்த் தியாகங்களையும் செய்யவேண்டியேற்பட்டது. 2015 ஜனவரி 08 ஆம் திகதி மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம். நான் பிரதமராக பொறுப்பேற்றேன். தனிநபருக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையாகும். இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *