அரசியல் குழப்பத்தால் தலைதூக்கும் ‘தவளை அரசியல்’ – குதிரைப் பேரமும் உச்சம்!

தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த, மலையக மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் ஆகியோர் நேற்று,  ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர்.

முன்னதாக, இவர்கள்  புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை நேற்றுமுன்தினம் சந்தித்திருந்தனர்.

இதுகுறித்து நேற்று அலரி மாளிகையில் கருத்து வெளியிட்ட இராதாகிருஷ்ணன், தாங்கள் மரியாதை நிமித்தமாகவே, மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததாகவும், அவரது அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என்றும் கூறினார்.

இவர்கள் அங்கம் வகிக்கும், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியை தமது பக்கம் வளைத்துப் போடுவதில் மகிந்த ராஜபக்ச தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் மனோ கணேசனுடனும் பேச்சு நடத்தியிருந்தார்.

எனினும், தமது கட்சியைச் சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ரணில் விக்கிரமசிங்கவுக்கே அதரவு வழங்குவர் என்று நேற்று மனோ கணேசனும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதியளித்தனர்.

அதேவேளை, முன்னதாக, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, பின்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஸ் மற்றும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க ஆகியோர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இரண்டு தரப்புக்கும் மாறி மாறி ஆதரவு தருவதும், பின்வாங்குவதுமான நிலை தொடர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *