கூட்டமைப்பை வளைத்துப் போடுவதில் இரு தரப்பும் மும்முரம்! – சம்பந்தனை நாமல் நேரில் சென்று சந்திப்பு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இரண்டு தரப்புக்களும் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர ஆகியோரை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று சந்தித்துள்ளனர். இதன்போது, “நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்து வருகின்றார். கூட்டமைப்பின் ஆதரவு எங்களுக்கு அவசியம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலைபேசி ஊடாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் நேற்றுப் பேசியுள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் வழங்கினால் ஆதரவு வழங்கத் தயார் என்று இரு தரப்பினரிடமும் தான் கூறியுள்ளதாக ‘புதுசுடர்’ இணையத்தளத்திடம் சம்பந்தன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *