மஹிந்தவுடன் கைகோர்க்கும் மு.கா., அ.இ.ம.கா.?

அரசியல் அமைப்பின் 42(4) பிரிவின் கீழ் தமக்குரிய நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக சற்று முன்னர் பிரதமராக நியமித்தார்.

இந் நிலையில், “தானே அரசியல் யாப்பின் பிரகாரம் தற்போது பிரமர்” என ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துரைத்தும் உள்ளார்.

திடீரென அரசுக்குள் ஏற்பட்ட தீப்பொறியின் அலை முழு நாட்டையும் அசர வைத்துள்ளதுடன். இப் பதவிப் பிரமாணத்தையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல்கள் இரு தரப்புக்களிலும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

அது மட்டுமல்லாது ஆட்சியமைக்க போதிய ஆசனங்களை கைப்பற்றும் நிலைப்பாட்டை உருவாக்க துடிக்கும் ஆட்சியாளர்கள் தொடரான பேச்சுவார்த்தைகளை அலரி மாளிகையில் நடாத்தி வருகின்றனர்.

அத்துடன், தற்போது சிறுபான்மைக் கட்சிகளுடனான உள்ளக கலந்துரையாடல்கள் மற்றும் பேச்சு வார்த்தைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அரசியல் நிலையில் ஏற்பட்ட அதிர்ச்சியால் பல்வேறு அரசியல் வியாக்கிணங்கள் தோற்றமளிப்பதுடன், இவர்களில் யாருக்கு ஆட்சியின் வலிமை கைகூடும் என்பதும் பெரும் குழப்பமான நிலையிலுள்ளது.

இருந்த போதிலும், சிறுபான்மைக் கட்சிகள் என்ற வகையில் அ.இ.ம.கா. மற்றும் மு.கா. ஆகியவற்றின் முடிவுகளிலும் பெரும் திருப்பத்துக்கு வழியுண்டு என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

அத்துடன், சில உள்ளார்ந்த தகவல்களின் பிரகாரம் இரு முஸ்லிம் கட்சிகளும் பிரதமர் மஹிந்தவுடன் இணைந்தே ஆட்சிக்கு கரம் கோர்க்கலாம் எனவும் ஒரு நிலைப்பாட்டை ஊகிக்க வழி சமைக்கின்றது.

இருந்தாலும், தற்போது அலரி மாளிகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் பங்கேற்றிருக்கும் நிலையில், இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இது விடயம் குறித்து கட்சியின் உயர் மட்ட ஆலோசனைக்காக, உடனடியாக நாடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாக இருந்தாலும் ஜனாதிபதியினால் வெளிக்கொணரப்பட்ட திடீர் அதிர்ச்சியின் திருப்பு முனையில் சிறுபான்மைக் கட்சிகளின் பங்களிப்பு இன்றியமைதனவாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இப்படியான தருணத்தில் முஸ்லிம் கட்சிகள் பெருமளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனேயே கைகோர்க்கும் என்ற உறுதிப்பாடே அதிகம் காணப்படுகின்றது.

– கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *