விக்கியின் புதிய கட்சியை புளொட்டும் புறக்கணிப்பு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு நிகழ்வில், தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் கட்சியும் பங்கேற்கவில்லை. அந்தக் கட்சியின் தலைவர், உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் எவருமே கலந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்கள் பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, த.சித்தார்த்தன் எம்.பி. தலைமையிலான புளொட் ஆகிய கட்சிகளும் பங்காளிகளாக உள்ளன.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது அரசியல் எதிர்காலம் தொடர்பில் பேரவையின் கூட்டத்தில் அறிவிக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நேற்றைய கூட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எந்தவொரு உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை, புளொட் கட்சியின் தலைவர், உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட எவரும் பங்கேற்கவில்லை.

மேலும், விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியிலிருந்தபோது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அவரை ஆதரித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்களில் திருமதி அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், பொ.ஐங்கரநேசன், இ.இந்திரராசா ஆகியோரே பங்கேற்றனர்.

தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் கூட்டமைப்பை விமர்சித்து வரும் முன்னாள் அதிபரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான க.அருந்தவபாலனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டங்களில் பங்கேற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *