மனச்சாட்சியே இல்லாதவர் விக்கி! எனக்கும் அரசியல் தெரியும்!! இனித்தான் ‘கேம்’ ஆரம்பம்!!! – சிவஞானம் அதிரடி

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும் என நினைத்தேன். ஆனால், தனக்கு மனச்சாட்சியே இல்லை என்பதை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் அரசியல் தலைமைத்துவமற்ற செயற்பாடுகளாலேயே முரண்பாடுகளும் ஏற்பட்டன.”

– இவ்வாறு காரசாரமாகக் கருத்து வெளியிட்டார் வடக்கு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஒரு தடவையல்ல பல தடவைகள் தானே காப்பாற்றினார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“எனக்கும் அரசியல் தெரியும். இனித்தான் ‘கேம்’ ஆரம்பம்” என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று நடைபெற்றது. இன்று நள்ளிரவுடன் சபை கலைகின்றது. இந்நிலையிலேயே வடக்கு அவைத் தலைவர் சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியில் நான் பல விடயங்களுக்குத் தடையாக இருக்கின்றேன் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் நான் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் முதலமைச்சர் என்னைத் தவறாக விமர்சிக்கமாட்டார். அவருக்கு மனச்சாட்சி இருக்கின்றது. அதனை நான் நம்புகிறேன் எனக் கூறியிருக்கின்றேன்.

ஆனால், முதலமைச்சர் தனக்கு மனச்சாட்சியே இல்லை. என்பதைத் தனது பிரத்தியே செவ்வி ஊடாக வெளிப்படுத்திவிட்டார்.

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சகல நியதிச் சட்டங்களும் பாரிய பிழைகளுடன் வந்தன. அத்தனை நியதிச் சட்டங்களையும் இரவு, பகலாக பல்வேறு நெருக்கடிகள், துன்பங்களுக்கு மத்தியில் படித்து திருத்தியமைத்தவன் நான்.

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை பொறுப்பேற்று கொஞ்ச நாட்களில் 2014ஆம் ஆண்டுக்கான பாதீடு ஆளுநரின் அங்கீகாரத்துடன் வந்தது. மோசமான பிழைகளுடன் அந்தப் பாதீடு தயாரிக்கப்பட்டிருந்தது. அப்போது இந்தச் சபையைக் குழப்ப ஒரு குழு இயங்கிக் கொண்டிருந்தது. அதனை அறிந்து நான் பிரதம செயலாளர் பத்திநாதனை அழைத்து அந்தப் பாதீட்டில் இருந்த பாரிய மோசமான பிழைகளைத் திருத்தியமைத்தேன். பாதீடு சபையில் அங்கீகரிக்கப்பட்டது.

அதற்குப் பின்னர் நவம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் முதலமைச்சர் பாதீட்டில் கையொப்பம் இடவேண்டும். ஆனால் முதலமைச்சர் கொழும்பு சென்றுவிட்டார். உடனடியாகவே நான் எனது சொந்த வாகனத்தில் கொழும்புக்குச் சென்று அதில் கையொப்பம் பெற்றுக் கொண்டு வந்து சமர்ப்பித்தேன்.

மோசமான விளைவுகளை அன்று நான் தடுத்தேன். இதற்காக எனக்கு முதலமைச்சர் கொடுத்த கௌரவமே நான் பல விடயங்களுக்கு தடையாக இருந்தேன் என்ற கருத்து.

நான் மாகாண சபையில் அவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தபோது எனக்கு கஸ்டமாக இருக்கவில்லை. காரணம் எனக்கு நடைமுறைகள், ஒழுங்குகள் அனைத்தும் தெரிந்திருந்தது. ஒருகாலத்தில் முக்கியமான இயக்கம் ஒன்றின் தலைவரால் வடக்கு – கிழக்கு இணைந்த சபைக்கு தலைவராகப் பிரேரிக்கப்பட்டவன் நான். மாகாண சபை முறைமை எனக்குப் புதியதல்ல.

மாகாண சபை எதுவுமே செய்யவில்லை என்பது போக்கிலித்தனம். ஆனால், முழுவதும் செய்தோம் என்றும் சொல்ல முடியாது. அரசியல் தலைமைத்துவமற்ற செயற்பாடுகளால் தேவையற்ற முரண்பாடுகளையே ஏற்படுத்தியிருக்கிறோம். ஆனாலும், நாம் தோல்வி என்று அர்த்தமில்லை. முழுமையாக வெற்றியடையாமல் இருக்கலாம்.

எதிர்காலத்தில் சபைக்கு வருகின்றவர்கள் அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு முன்னர் தம்மாலானதைச் செய்யவேண்டும். அதற்குத் தெரிந்தவர்கள் வரவேண்டும். அவ்வாறு வந்தால் மாகாண சபை செழிப்புறும். எனக்கு தற்போது விடுதலை கிடைத்துள்ளது. எனக்கும் அரசியல் தெரியும். இனித்தான் ‘கேம்’ ஆரம்பம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *