வரலாறே தெரியாத விக்கி எம்மை விமர்சிக்க என்ன அருகதை உண்டு? – கொதித்தெழுகின்றார் மாவை

“அரசியலில் ‘அ’, ‘ஆ’வையே இப்போதுதான் படிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்றார். வரலாறு தெரியாத அவர் எம்மைக் குறை சொல்லித் திரிகின்றார்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பும் உதவிப் பொருள் வழங்கலும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களுக்கு உரிமைதான் வேண்டும்; அபிவிருத்தி தேவையில்லை என்று சாரப்பட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்வொன்றில் அண்மையில் பேசியுள்ளார். அவர் நீதியரசராக இருந்து ஓய்வுபெற்றவர். அவர் வடக்கு மாகாண சபையை நடத்திய இலட்சணத்தை மக்கள் நன்கு அறிவார்கள். அவரது நடத்தையால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்கின்றார்.

எங்கள் கட்சியில் போட்டியிட்டுத்தான் வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவானவர் இந்த விக்னேஸ்வரன். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒழித்துக் கட்டுவதில் வலு தீவிரமாக செயற்படுகின்றார். நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தலில் எல்லாம் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டார். திசை மாறிப் பறப்பவராக இருந்து கொண்டு எங்களைத் தீவிரமாக விமர்சிக்கின்றார்.

அரசியலில் அவர் இப்போதுதான் ‘அ’, ‘ஆ’ படிக்கின்றார். வரலாறு தெரியாத அவர் எம்மை சகட்டு மேனிக்கு விமர்சிக்கின்றார். அவர் முதலில் அரசியல் படிக்கவேண்டும். எமது இலட்சியத்தை எப்படித் தந்திரமாகப் பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் அவர் படிக்கவேண்டும்” – என்றார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மின் கே.சயந்தன், இ.ஜெயசேகரன், யாழ். மாநகர மேயர் இ.ஆர்னோல்ட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *