கூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம்! – வடக்கு அவைத் தலைவர் கவலை

வடக்கு மாகாண சபை ஆரம்பத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக – ஒற்றுமையாக இருந்தபோதும் சபை முடிவடையும்போது அத்தகைய ஒற்றுமை இல்லாத நிலை காணப்படுகின்றது என அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கவலை வெளியிட்டார்.

வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 2013 ஆம் ஆண்டு மாகாண சபை உருவாக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது. அப்போது கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இணைந்து 30 உறுப்பினர்களைக் கொண்ட சபையாக ஒற்றுமையாக இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டது.
ஆனால், சபை முடிவடையும் இந்த நேரத்தில் அவ்வாறான ஒற்றுமை இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் நான்கு கட்சிகளாக இருந்த கூட்டமைப்பு தேய்ந்து மூன்று கட்சிகளாகவே தற்போது உள்ளது.

அவ்வாறு ஒரு கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கின்ற நிலையில் தற்போது இன்னும் பல கட்சிகளின் தோற்றப்பாடுகளும் ஏற்பட்டிருக்கின்றன.

அவ்வாறு புதிதாக உருவாகும் கட்சிகள் எல்லாம் தேசியம் பேசி அதுவும் தமிழ்த் தேசியம் தான் பேசுகின்றார்கள். இப்பொழுது எனக்குத் தெரிந்த அளவிலே ஆகக் குறைந்தது கூட்டமைப்புக்கு வெளியே மாகாண சபைக்குள்ளேயே மேலும் மூன்று கட்சிகள் அல்லது அமைப்புக்கள் உருவாகி பருத்துப் பெருகி மக்கள் முன் நிற்கப் போகின்றார்கள். ஆனால், நான் கூட்டமைப்பில்தான் தொடர்ந்தும் இருப்பேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *