அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு!

தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதத்தி்ன் பின்னரான சூழலில் இலங்கையில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள முல்லைத்தீவு மாவட்டம், இறுதிக்கட்டப் போரில் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் சந்தித்தது. ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் அந்த மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்களின் காணிகள் இலங்கை இராணுவம், இலங்கை அரச திணைக்களங்கள் ஆகியவற்றினால் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இந்த ஆக்கிரமிப்பு தொடர்பில் அமைச்சர்களிடம் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் முறையிட்டிருந்தனர்.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் கட்டம் கட்டமாக குடியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் அவர்களது சொந்தக் காணிகளில் குடியேற்றப்பட்டமை உண்மைதான்.

ஆனால், சொந்த இடத்துக்குச் சென்றால் நிம்மதியாக வாழலாம் என்ற மன உறுதியோடு மீள்க் குடியமர்ந்த மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போன்று பேரதிர்ச்சியே காத்திருந்தது.

மக்களது பூர்வீக நிலங்கள் உட்பட விவசாய நிலங்களும் இலங்கை இராணுவத்தினரால் ஏலவே அபகரிக்கப்பட்டிருந்தன. இதனால் காணி உரிமையாளர்களான மக்கள் மாதிரிக் கிராமம் என்ற பெயரில் அரச காணிகளில் மீண்டும் தறப்பாள் கொட்டகைகளில் குடியேற்றப்பட்டனர்.

மீண்டும் அகதி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட மக்கள் அன்று முதல் இன்றுவரை தமது சொந்தக் காணிகளை மீட்டுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் பல தடவை எடுத்துக் கூறியபோதும் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்றே அமைச்சர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

அமைச்சர் ராஜித சேனரத்ன சிங்களக் குடியேற்றம் என்பதை முற்றாகவே மறுக்கின்றார். ஆனால், சிங்கள மக்களுக்கு வடக்கு மாகாணத்தில் வாழ்வதற்கான உரிமை உண்டும் என்றும் அவர் சொல்கின்றார்.

முல்லைத்தீவில் புத்தர் சிலைகள் வைக்கப்படவே இல்லை என்று அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

ஆனால், கொழும்பில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது.

இந்தநிலையில், வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஆராய கடந்த ஜூன் மாதம் வடக்கு மாகாண சபை செயலணி ஒன்றை உருவாக்கியிருந்தது.

இது ஒருபுறம் இருக்க, முல்லைத்தீவு மக்களின் பிரதான பொருளாதார தொழில்களாக விவசாயம், மீன்பிடி என்பன காணப்படுவதுடன் கால்நடை வளர்ப்பு, காடு வளர்ப்பு என்பனவும் காணப்படுகின்றன.

ஆனால், அந்தத் தொழில்களைக் கூட அந்த மக்கள் செய்ய முடியாதவாறு இலங்கை இராணுவம் சிங்கள மக்களை முல்லைத்தீவில் குடியமர்த்துவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

80 ஆயிரம் ஏக்கர் காணிகளை அரச திணைக்களங்கள் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அபகரித்துள்ளன எனவும் ரவிகரன் ஏலவே கூறியிருந்தார்.

முல்லைத்தீவில் அதிகரித்து வரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கடந்த ஜூலை மாதம் நேரில் சென்று பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படம்.

கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைப்பதைத் தடுக்கும் நோக்கில் திருகோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்புகளில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிடப்படுவதாக மக்கள் கூறுகின்றர். 1980களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில், அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது மணல் ஆறு பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு வெலிஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 2015இல் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மைத்திரி – ரணில் அரசு அதன் தொடர்ச்சியை நிறைவேற்றி வருகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழல் வசதியாக அமைந்து விட்டதாக மக்கள் கவலையோடு கூறுகின்றனர்.

முல்லைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டுக் காணப்படுகின்றனர்.

கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய நான்கு கடல் நீரேரிகளையும் தன்னகத்தே கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் நில உயரமானது கடல் மட்டத்திலிருந்து 36 தசம் 5 மீற்றர் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது.

மாவட்டத்தின் 70 கிலோ மீற்றர் நீளமுடைய வளமான கடற்கரை படுக்கையும் ஏரிகளும் மீன்பிடி அபிவிருத்திக்கு மிகவும் உகந்ததாகக் காணப்படுகின்றன. இந்த ஏரிகள் இறால், நண்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்றவையாகும்.

பெரிய குளங்களில் நன்னீர் மீன்பிடியை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான குடும்பங்களின் ஜீவனோபாய முயற்சியாக மீன்பிடித் தொழில் காணப்படுவதோடு அவர்களின் வாழ்வாதார முயற்சியையும் வருமான வழிகளையும் பெருக்க இது பெரிதும் உதவுகின்றது.

போரின் இறுதிக்கட்டப் பேரழிவு, ஆழிப்பேரலை (சுனாமி), பல தசாப்தங்களாக இடம்பெற்ற இடப்பெயர்வு என்பவற்றால் முல்லைத்தீவு மீனவர் சமுதாயம் பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன.

இருப்பினும், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரன நிலையில் அவர்களுக்கு இழப்பு என்பது தொடர்கதையாகவே தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா கூறுகின்றார்.

ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, மீன்பிடித்தலுக்கு, இராணுவ ரீதியான தடைகளை விதித்ததுடன் கண்காணிப்பு என்ற பெயரில் மீனவர்களின் சுதந்திரமான தொழிலுக்கும் தடைவிதித்திருந்தது.

இதன் பின்னர் மைத்திரி – ரணில் அரசில் அவர்களின் நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள் சட்டத்திற்கு முரணாகவும், ஆனால் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடனும் அரங்கேறி வருகின்றன.

தமிழ் மக்களின் மீன்பிடி வாழ்வாதாரம் இலங்கையின் வேறு பகுதிகளிலிருந்து பெருமளவில் வந்த சிங்கள மீனவர்களினால் சிதைக்கப்பட்டது.

குறிப்பாக முல்லைத்தீவு நாயாறுப் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி தமிழர்களின் எட்டு மீன் வாடிகள், மூன்று படகுகள், இரண்டு இயந்திரங்கள், 27 வலைகள் ஆகியன தீயிட்டு எரிக்கப்பட்டன.

நிலைத்திருக்கக்கூடிய உள்ளூர் மீன்பிடித் தொழிலை விருத்தியாக்கும் பொறுப்பையுடைய இலங்கையின் மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் விஜதமுனி சொய்சா நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், குறித்த பிரச்சினை தீர்வின்றி தொடர்கின்றது.

சட்டவிரோத மீன்பிடிக்கு அரசு அனுமதியளித்துள்ளதைக் கண்டித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.

இவை ஒருபுறம் இருக்க விவசாயத்திற்கு உகந்த செங்கபில மற்றும் செம்மஞ்சளாக இருபெரும் இருவாட்டி மணற்பிரிவுகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் முன்னொரு காலத்தில் விவசாயம் செழிப்படைந்து காணப்பட்டது.

எனினும், தாயகப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையுடன் ஆரம்பித்த அழிவு, இன்றுவரை தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. விவசாய நிலங்களாகக் காணப்பட்ட பகுதிகள் தரிசு நிலங்களாக மாற்றமடைந்துள்ளன; மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது மாத்திரமன்றி ஏக்கர் கணக்கிலான விவசாய நிலங்களை அபகரித்துள்ள இராணுவம் அதில் முகாம்களை அமைத்துள்ளதுடன் தமது தேவைக்காக விவசாய செய்கையை மேற்கொண்டு வருகின்றது.

இதன்காரணமாக அன்றாட உணவுத் தேவையைக்கூட கொண்டு நடத்த முடியாது அல்லலுறும் விவசாயிகள் உட்பட பொதுமக்கள், வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

இவை மாத்திரமன்றி முல்லைத்தீவின் பிரதான வளமாக விளங்கிய காடுகளை அழித்து அங்கு குடியேற்றங்களை உருவாக்கும் செயற்பாடும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் முல்லைத்தீவில் வாழும் பொதுமக்களிடமும் அங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் இலங்கை இராணுவத்தினர் தகவல்களை கடந்த ஜூலை மாதம் திரட்டியதாக மக்கள் கூறியிருந்தனர்.

இந்தநிலையிலேதான் தமிழர்கள் இனம், மொழி, பொருளாதாரம், அரசியல் எல்லாவற்றிலும் திட்டமிட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதற்காகப் போராடவும் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அவர்களது போராட்டம் அதிகாரத் தரப்புக்கும், ஒடுக்குபவர்களுக்கும் எதிராகவே இருக்கின்றது. தமிழ் மக்கள் வீதியில் இறங்கி துணிவுடன் பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் தாமாகவே தனித்து நின்று போராடித் தீர்வு பெற முற்படுகின்றனர்.

இறுதிப் போரின் பின்னர் தமிழர் தாயகத்திலே தமிழ் மக்களின் சகிப்புத்தன்மையை சோதிக்கின்ற விடயங்களே அதிகம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் உரிமைக்காகப் போராடிய இனம் எத்தனை காலம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்?

போராட்டமே வாழ்வாகிப்போன முல்லைத்தீவு மக்கள் மீண்டும் மீண்டும் தெரிவிப்பது தீர்வு கிடைக்கும் வரை பீனிக்ஸ் பறவைகள் போன்று மீண்டெழுவோம் என்பதையே!

– துவாரகி சுந்தரமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *