அனந்தியின் கட்சியால் தமிழ் மக்களுக்கு பெருமை கிட்டுமா என்பது கேள்விக்குறி!- கூறுகிறார் சத்தியலிங்கம்

அனந்தி சசிதரனால் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியால் அவருக்குப் பெருமை கிடைக்கிறதோ இல்லையோ அதனூடாகத் தமிழர்களுக்குப் பெருமை கிடைக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே என மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட மகளிர் அணிக்கான நிர்வாகத் தெரிவு வவுனியாவில் தமிழரசுக்கட்சி அலுவலகமான தாயகத்தில் நேற்று இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

வட மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் தற்போது அரசியல் பரபரப்பான நிலையில் காணப்படுகின்றது. எமது நாட்டில் தற்போது பல விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எமது முதலாவது வடக்கு மாகாண சபையும் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிடுகின்றது. அத்துடன் இலங்கையில் தமது பதவிக்காலத்தை முடிவுறுத்திய சபைகளாக 6 சபைகள் காணப்படுகின்றன.

ஆட்சிக்காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல் வரவேண்டும். இந்தத் தேர்தலை மையமாக வைத்தே இந்த நாட்டில் அரசியல் பரபரப்பான நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையிலேயே அனந்தி சசிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு பெண் செயலாளர் நாயகமாக இருக்கும் முதலாவது கட்சி என்ற பெருமை அவருக்குக் கிடைத்ததாகச் சொல்லப்படுகின்றது. அந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கிறதோ, இல்லையோ அதனூடாக தமிழர்களுக்குப் பெருமை கிடைக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே.

இதேபோலவே முதலமைச்சரும் புலி வருது புலி வருது என்ற கதையாக இன்னும் புலியைக் காணவில்லை. அவர் ஒரு நாளைக்கு கூறுகின்றார் புதிய கட்சியை தொடங்கப்போகின்றேன் என்று. பின்னர் பொது அமைப்புக்களின் தலைவராக இருந்து செயற்படப்போவதாகத் தெரிவிக்கின்றார். அதன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிழை என்கிறார். அதற்குமப்பால் முதலமைச்சர் வேட்பாளராகத் தன்னை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிறுத்தினால் தான் கூட்டமைப்புக்குள் வருவதாகக் கூறுகின்றார். இவ்வாறு குழப்பிய கதையை அவர் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்.

இந் நிலையில் தான் எதிர்வரும் 24 ஆம் திகதி தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக தெரிவிக்கப்போவதாக கூறுகிறார். தமிழ் மக்களினுடைய அரசியல் எதிர்காலம் பற்றியதாக அல்லாமல் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக அறிவிப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். இவ்வாறாக வடக்கில் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் தென்பகுதியிலும் இந்தத் தேர்தலை மையமாக வைத்து பிரச்சினை போய்க்கொண்டிருக்கின்றது.

ஐ.தே.கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய இந்த அரசைச் சீர்குலைத்து இடைக்கால அரசை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மஹ்ந்த தலைமையிலான அணி முனைப்பு காட்டி வருகின்றது.
அத்துடன் தேர்தல் வரலாம் என்ற நிலையில் வெவ்வேறு கட்சிகள் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்குள் ஜனாதிபதியைக் கொலை செய்ய முயற்சித்த கதையும் போய்க்கொண்டிருக்கின்றது-என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *