புதிய கட்சியை ஆரம்பித்தார் அனந்தி

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில், இந்தப் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில், அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றது.

மதத் தலைவர்கள், முன்னிலையில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்சியின் ஆரம்ப நிகழ்வில் 20 இற்கும் குறைவானவர்களே பங்கேற்றிருந்தனர் எனத் தகவல்கள் தெரிவித்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகக் கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் அரசியலுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
அதே தேர்தலில் முதலமைச்சர் வேட்ப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு மக்கள் மத்தியில் செய்யப்பட்ட அதீத அறிமுகம் போன்று அனந்தி சசிதரனுக்கும் அறிமுகம் கொடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளரின் மனைவி என்றும், இறுதிப் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண் என்றும், அந்த யுத்தத்தின் சாட்சியளர் என்றும் வெவ்வேறு விதமான அறிமுகம் மக்கள் மத்தியில் செய்யப்பட்டது.

இதன்படி வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வனுக்கு அடுத்த படியாக 87, 212 வாக்குகளை அனந்தி பெற்றிருந்தார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த கால கட்டத்தில் ஐ.நா. சென்று இறுதி யுத்தத்தின்போது நடை பெற்றது இனப்படுகொலை என வெளிப்படையாக பதிவிட்டிருந்தார்.

இவரின் செயற்படுகளை அடுத்து தமிழரசுக் கட்சிக்கும் இவருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட்டார்.

இதன் பின்னர் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சராக்கப்பட்ட இவர் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்ப்பட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவுறும் நிலையில் அடுத்த தேர்தலில் எந்தக் கட்சி ஊடாகப் போட்டியிடுவது என்ற இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினார். இதனடிப்படையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயர் கொண்ட புதிய கட்சியை அவர் நேற்று ஆரம்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *