சர்வாதிகார சபையானது நோர்வூட் பிரதேசசபை – அவைக்குள் சீறிப்பாய்ந்தனர் கூட்டணி உறுப்பினர்கள்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்தின்கீழுள்ள நோர்வூட் பிரதேச சபையானது, சர்வாதிகார சபைபோல் செயற்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


அத்துடன், பிரதேசசபைத் தலைவரினது ஏதேச்சாதிகார செயற்பாட்டைக் கண்டித்து சபைக்குள் இன்று ( 18) போராட்டமும் நடத்தினர்.

நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.

சபைஅமர்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள், சம்பள உயர்வுகோரி தொழிலாளர்களின் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அதில் பங்கேற்றனர்.

இதனால், 10.03 மணியளவிலேயே அவர்களால் சபைக்குள் செல்லக்கூடியதாக இருந்து. எனினும், சபைகூடி 3 நிமிடங்களுக்குள் அதை ஒத்திவைப்பதற்கு பிரதேச சபைத் தலைவர் நடவடிக்கை எடுத்துவிட்டார்.

இதை கண்டிக்கும் வகையில் சபைக்குள் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதுடன், சபைத் தலைவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

“ தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வுவேண்டும் என வலியுறுத்தி இ.தொ.கா. உறுப்பினர்களும் கறுப்பு ஆடை அணிந்தே சபைக்கு வந்திருந்தனர். எனினும், சம்பள உயர்வு போராட்டத்தில் பங்கேற்ற எம்மை பழிவாங்கும் நோக்கிலேயே சபை ஒத்திவைக்கப்பட்டது. இதிலிருந்து இதொகாவின் இரட்டைமுகம் அம்பலமாகியுள்ளது.

மாதம் ஒருமுறைதான் சபை கூடுகிறது. அதையும் இப்படி ஒத்திவைப்பது அடாவடிச்செயலாகும். கூட்ட நடப்பெண்ணை காரணம்காட்டமுடியாது” என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *