டிசம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்! – ஆயினும் அதற்குப் பணம் வேண்டுமாம்; அரசிடம் பேசவுள்ளது கூட்டமைப்பு

“படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கவேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். அதற்கமைய யாழ். மாவட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ஆயினும், காணிகளை விடுவிப்பதற்குப் பணம் தேவையென்று படைகள் கோரியுள்ளதால் அதனை வழங்கவேண்டுமென்று நாம் அரசைக் கோரவுள்ளோம்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் யாழ். மாவட்ட அரச அதிபர் எஆ.வேதநாயகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன் பின்னர் இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று நடந்த இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரசஅதிபர், பிரதேச செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும், இராணுவம், விமானப்படை, கடற்படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நேற்று பிற்பகல் மூன்று மணி முதல் மாலை ஆறு மணிவரை இந்தக் கலந்துரையாடல் நடந்தது.

இது குறித்து சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்.மாவட்டத்தில் தனியார் காணி, அரச காணிகளில் விடுவிக்கப்பட்டவை எவை, இன்னமும் விடுவிக்கப்படவுள்ள காணிகள் எவை என்று நேற்றுக் கலந்துரையாடல் நடந்தது.

ஒவ்வொரு பிரதேச அலுவலர் பிரிவிலும் இராணுவம், கடற்படை, பொலிஸாரிடம் இருக்கும் நிலங்களை வகையாகப் பிரித்து நாங்கள் பார்த்தோம்.

அதில் கடந்த தடவை இருந்த தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது இராணுவத்தினராலேயே பல காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறோம். கடற்படையினர் இதுவரை விடுவித்தது மிக மிக சொற்ப அளவிலான இடங்களைத் தான்.

ஆகவே கடற்படைத் தளபதியிடம் இன்று (நேற்று) எடுக்கப்பட்ட தரவுகள் எல்லாவற்றையும் கொடுத்து மிக விரைவாக அந்தக் காணிகளை விடுவிக்கும் கால அட்டவணையைத் தெளிவாக எங்களுக்குக் கொடுக்குமாறு கேட்டிருக்கிறோம்.

இங்கு இராணுவத்தினர் ஏராளமான காணிகளை விடுவித்திருந்தாலும் இன்னமும் விடுவிக்கப்படுவதற்கு பல ஏக்கர் காணிகள் இருக்கின்றன. அதில் பல காணிகளைத் தாங்கள் விடுவிப்பதற்கு முடிவெடுத்துவிட்டதாக அவர்கள் சொன்னார்கள்.

ஆனால் அதனை விடுவிப்பதில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டினார்கள். அதாவது அங்கு உள்ள இராணுவத்தினரை இன்னொரு இடத்திற்கு மாற்றுவதற்கு மாற்றீடான காணிகள் எங்கே என்பதனைக் கண்டுபிடிப்பதும், தங்களுடைய அந்த இடமாற்றத்திற்குத் தேவையான பணத்தையும் புதிய கட்டடங்களுக்குத் தேவையான பணத்தையும் அரசு கொடுக்கவேண்டும் எனக் கூறினார்கள்.

ஆகவே இந்த இரண்டும் சரி வந்தால் தாங்கள் கூடுதலான பிரதேசங்களில் இருந்து வெளியேறுவதற்கு ஏற்கனவே தீர்மானித்துவிட்டதாக இராணுவத்தினர் கூறினார்கள்.

பொலிஸாரோடு பேசியபோது, பல இடங்களில் புதிய பொலிஸ் நிலையங்களை அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. அதில் உதாரணத்திற்கு அனலைதீவுப் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கே பொலிஸ் நிலையம் இல்லை.

இதனால் பிடிவிறாந்தோடு உள்ள பலர் அனலைதீவுப் பிரதேசத்தில் ஒளித்திருக்கின்றார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஏனென்றால் அங்கே பொலிஸ் நிலையம் இல்லை. ஆகவே இராணுவம், கடற்படை அந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேறுகின்றபோது அங்கு சிவில் நிர்வாகம் ஏற்படவேண்டுமாக இருந்தால் பொலிஸார் தேவை.

பொலிஸ் நிலையங்கள் அமைப்பதில் அங்கேயும் இரண்டு பிரச்சனைகள் உள்ளன. முதலாவது அந்தக் காணிகளை வாங்குவது அல்லது சுவீகரிப்பது. அதற்கான பணம் தேவை. இதில் காணி எடுத்துக் கொடுக்கப்பட்ட பிறகும் கூட பொலிஸ் நிலையங்களைக் கட்டுவதற்குப் பணம் விடுவிக்கப்படவேண்டி இருக்கின்றது.

யாழ். பிரதேசத்தில் சில பொலிஸ் நிலையங்கள் 2020,2022 ஆம் ஆண்டுகளிலேயே கட்டுவதற்காக கால அட்டவணை போடப்பட்டுள்ளது.

ஆகவே இதில் மிக முக்கியமாக அரசு பணம் விடுவிக்கப்படாமல் இருப்பது காணி விடுவிப்புக்கு ஒரு தடையாக இருக்கிறதென்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. இது சம்பந்தமாக நாங்கள் அரசுடன் பேசவேண்டியுள்ளது.

மீள்குடியேற்றத்திற்கு, மீள் கட்டுமானத்துக்குப் பணம் போதாது. எங்கள் மக்கள் திரும்பச் சென்றுகுடியேறவேண்டும் என்ற தேவை உள்ளதால் அதற்கு அரசு ஒதுக்கீடுகளை அதிகரிக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *