புதிய அரசமைப்பு வரும்… ஆனால் வராது! – கூறுகின்றார் டக்ளஸ்

“புதிய அரசமைப்பில் ஏக்கிய ராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு எனச் சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள். அது அப்பட்டமான பொய். தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும்.”

– இவ்வாறு கூறியுள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா.

“புதிய அரசமைப்பு வரும். ஆனால் வராது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து ஈ.பி.டி.பியின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுக் கூட்டம் அண்மையில் பிரதமர் ரணில் தலைமையில் நடைபெற்றிருந்தது. இதன்போது புதியஅரசமைப்பில் ஏக்கிய ராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என்பது அர்த்தமல்ல. உண்மையில் ஏக்கிய ராச்சிய என்பது ஒற்றையாட்சியே. இது தமிழ் மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயல் எனவும் நான் கூறியிருந்தேன்.

அதனை ஏற்றுக் கொண்டு டக்ளஸ் தேவானந்தா கூறுவதில் நியாயம் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாட்டைப் பிரிக்கபோகிறீர்களா? நாட்டைக் குழப்பப் போகிறீர்களா? என்று என்னைக் கேட்கிறார். நான் மக்களை உசுப்பேற்றவில்லை. நீங்கள்தான் மக்களை உசுப்பேற்றினீர்கள். எதற்காக மக்களை உசுப்பேற்றினீர்கள்? என நான் அவரிடம் திருப்பிக் கேட்டேன்

அப்போது பிரதமர் ரணில் தலையிட்டுத் தமிழ்மொழி தெரியாவிட்டாலும் ஏதோ பிரச்சினை உள்ளது என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். ஆகவே, தமிழ்மொழியில் புலமை பெற்றவர்களை அழைத்துப் பேசித் தீர்மானிக்கலாம் எனக் கூறியிருக்கின்றார்.

இந்நிலையில், ஊடகங்கள் ஒருபக்கக் கருத்துக்களை மட்டும் செய்தியாக்குகின்றன. ஆனால், எங்களுடைய பக்கத்தில் உள்ள கருத்துக்களை அவர்கள் கருத்தில் எடுப்பதில்லை” – என்றார்.

புதிய அரசமைப்பு வருமா? வராதா? என ஊடகவியலாளர்கள் டக்ளஸிடம் கேள்வி எழுப்பியபோது, “இந்தக் கேள்விக்கு எனது பதில் வரும்… ஆனால் வராது என்பதே ஆகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *