ஜனாதிபதித் தேர்தலில் சீனாவும் மூக்கை நுழைத்தது -ட்ரம்ப் திடுக்கிடும் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது என்று ஜனாதிபதி டிரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.

2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே, கடந்த மாதம் டிரம்ப் சீனா மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அதாவது, தான் அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதை சீனா விரும்பவில்லை என்றும், அதனால் இந்த ஆண்டுக்குள்(2018) அமெரிக்காவில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு சீனா முயற்சித்து வருவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டினார். இதை உடனடியாக சீனா மறுத்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் சி.பி.எஸ். செய்திச் சேனலுக்கு ஜனாதிபதி டிரம்ப் அளித்த ஒரு மணி நேர பேட்டி நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பப்பட்டது.
அதில் சீனா மீது அவர் புதியதொரு குற்றச்சாட்டை கூறினார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், சீனாவின் தலையீடும் இருந்ததாக அப்போது பகிரங்கமாக தெரிவித்தார். சீனா மீது டிரம்ப் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பது இதுவே முதல் முறையாகும்.

அவர் கூறுகையில், “அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டது. அதை விட அதிகமாக சீனாவும் இதில் தலையிட்டது என்றே நினைக்கிறேன். இதுதான் மிகப்பெரிய பிரச்சினை. இப்படி நான் சொல்வதால் ரஷியாவின் மீது கூறிய குற்றச்சாட்டில் இருந்து விலகி செல்கிறேன் என்று அர்த்தம் அல்ல. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையிட்டது. ஆனால் இதில் சீனாவின் குறுக்கீடும் இருந்தது என்றுதான் சொல்கிறேன்” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததா? என்பது பற்றி முன்னாள் எப்.பி.ஐ. இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் இருந்து டிரம்பின் அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் அண்மையில் திடீரென விலகிக் கொண்டார்.

இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “இது நிச்சயம் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கும் விஷயம். ஜெப் செசன்ஸ் ஏன் இந்த விசாரணையில் இருந்து விலகிக்கொண்டார் என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் நான் சரியாகவே செயல்பட்டேன் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

ரஷியாவின் தலையீடு தொடர்பான விசாரணையை நீங்கள் ரத்து செய்யப்போவதாக கூறப்படுகிறதே? என்ற மற்றொரு கேள்விக்கு, “அதுபோன்ற வாக்குறுதி எதையும் நான் அளிக்கவில்லை. அதுமாதிரியான நோக்கம் எதுவும் என்னிடம் இல்லை என்பதை நிச்சயமாக கூற முடியும். ஆனால், இந்த விசாரணை மிகவும் நியாயமற்ற ஒன்றாகும். ஏனென்றால் இதில் எந்த விதத்திலும் கூட்டுச் சதி இல்லை” என்று மறுத்தார்.

உங்களுக்கு தேர்தலில் உதவும்படி ரஷியாவை அழைத்தீர்களா? என்று கேட்டபோது, “எனக்கு தேர்தலில் உதவி செய்யும்படி ரஷியாவை அழைத்தேன் என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?… அவர்களால் எனக்கு உதவ முடியாது என்பதுதான் உண்மை. ரஷியாவை உதவிக்கு அழைத்தேன் என்று கூறுவது மிகவும் கேலிக்குரியது” என்று டிரம்ப் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *