தீர்வை எட்டுவதாயின் மைத்திரி – ரணில் அரசைப் பகைக்க முடியாது! – சம்பந்தன் திட்டவட்டம்

“புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமெனில் – தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டவேண்டுமெனில் மைத்திரி – ரணில் அரசைப் பகைக்க முடியாது. இந்த அரசு தொடரவேண்டும். இதனடிப்படையில் கூட்டமைப்பு அரசுக்குத் தனது ஆதரவை – ஒத்துழைப்பை வழங்கும்.”

– இவ்வாறு மட்டக்களப்பில் வைத்துத் திட்டவட்டமாக அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன்.

தம்மை அரசு விடுவிக்காவிடின் வரவு – செலவுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் என உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் கடந்த சனிக்கிழமை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் நிபந்தனை முன்வைத்தனர். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே அவர்கள் தாம் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தினர். கைதிகளின் கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்கிறார் என மாவை எம்.பியும் அங்கு குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அரசுக்கான கூட்டமைப்பின் ஆதரவு தொடரும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் தலைவர் சம்பந்தன் நேற்று உரை நிகழ்த்தியுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்ட புதிய பொதுச்சந்தை கட்டடத்தின் திறப்பு விழா நேற்றுக் காலை நடைபெற்றது. இதில் விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நாங்கள் அதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசை விரட்டிப் புதிய அரசு பதவிக்கு வருவதற்கு உதவினோம்.

புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதாக இருந்தால் புதிய அரசைப் பகைக்க முடியாது. புதிய அரசுக்கு ஒத்துழைக்கவேண்டிய தேவையிருக்கின்றது.

இன்று அபிவிருத்திகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. நாங்கள் இந்த அரசை ஆதரிக்கின்றோம். சில முக்கியமான விடயங்களுக்காக நாங்கள் அந்த ஆதரவை வழங்குகின்றோம்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இந்த அரசை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் பாரிய பங்களிப்புச் செய்தோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவே அதனை வழங்கினோம்.

இந்த நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசை அமைத்ததன் காரணமாகத் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசை விரட்டி புதிய அரசு பதவிக்கு வருவதற்கு உதவினோம்.

ஆட்சி அதிகாரங்கள் எங்களது கைகளுக்கு வரவேண்டும். அதன் மூலமாக எமது இறைமை மதிக்கப்படவேண்டும். எமது இறைமை மதிக்கப்படுவதன் ஊடாக எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் சுயாதீனமாக வாழக்கூடிய மக்களாகக் கருதப்படுவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *