மனோ எம்முடன் இணைந்து பயணிக்கவேண்டும்! – நேசக்கரம் நீட்டுகின்றார் சுமந்திரன்

“அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் நான் மோதவில்லை. யாருடனும் ஏதேனும் விடயங்களைப் பற்றி விமர்சனங்களை முன்வைப்பனே தவிர தனிப்பட்ட ரீதியில் யாரையும் தாக்குவதும் கிடையாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர் மனோ கணேசனுக்கு எதிராக எதனையும் கூற வேண்டுமென்றோ அல்லது அவருக்கு எதிராகச் செயற்பட வேண்டுமென்றோ நான் எதனையும் கூறவில்லை. மனோ கணேசன் முன்னரைப் போன்று எங்களுடன் சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும்.

அமைச்சர் மனோ கணேசனோடு நான் எந்தக் காலத்திலும் மோதியது கிடையாது. அதேபோன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடனும் மோதவில்லை. ஆக மனோ கணேசன் சொல்லுவதைப் பார்த்தால் ஏதோ நான் அவர்களுடன் மோத வேண்டுமென்பதற்காக மோதுவதைப் போல சொல்லியிருக்கின்றார்.

ஆனால், அப்படி எந்தக் காலத்திலும் நடந்தது இல்லை. இங்கு கடந்த முறை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது விக்னேஸ்வரன் ஐயா செய்த நல்ல விடயத்தையும் நான் சொல்லியிருந்தேன். அதாவது ஒரு பகுதியில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். இன்னொரு பகுதியில் தோல்வியடைந்திருக்கின்றார் என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆகவே, நான் சொல்லும் விமர்சனங்கள் ஒரு விடயத்தைப் பற்றினதாகவே இருக்குமே தவிர ஒரு தனிநபரை மையப்படுத்தி எந்தக் காலத்திலும் நான் எதுவும் சொன்னது கிடையாது. அமைச்சர் மனோ கணேசன் என்னுடைய நீண்ட கால நண்பர். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே பல வருடங்களாக எனக்கு பரீட்சயமானவர். அவரோடு சேர்ந்து பல விடயங்களை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம்.

கடந்த ஐனாதிபதி செயலணிக் கூட்டத்தில் அவருடைய அமைச்சுக்கு வழங்கவிருக்கும் நிதி இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பது குறித்துத்தான் நான் பேசத் தொடங்கினேன். ஆனால் அவர் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு தனக்கு எதிராக நான் ஏதோ பேசப் போகின்றேன் என்ற நினைப்பில் பேசிக் கொண்டே இருந்தார்.

அங்கு என்னைப் பேசவிடவில்லை. இறுதியாகக் கூட நான் பேசும் போது அவருடைய அமைச்சுக்கான நிதியைக் கொடுங்கள் என்று தான் சொல்லியிருந்தேன். அது எழுத்திலும் கொடுக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதைப் பற்றி அமைச்சர்களுக்குள்ளே இருக்கும் இழுபறி மக்களுக்கு வீடுகள் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடாது. அந்த இழுபறியை நீங்கள் தீர்த்து வைக்கவேண்டுமென்று நான் ஐனாதிபியிடம் நேரடியாகவே சொன்னேன்.

அங்கு இரண்டு அமைச்சர்களும் இருக்கிறபோது தான் அதனைச் சென்னேன். ஏனென்றால் ஒரு இழுபறி இருக்கிறது. ஆனால், அவ்வாறு இல்லை என்று எவரும் சொல்ல முடியாது. அந்த இழுபறியைத் தீர்த்து வைப்பதற்காககத் தான் ஒரு கூட்டமும் நடந்தது. இழுபறியில்லாமல் அதற்கு கூட்டம் வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே ,அதை நான் சொன்னபோது இரண்டு அமைச்சர்களும் தங்களுக்கிடையில் இழுபறியில்லை என ஒரேயடியாகச் சொன்னார்கள். நாங்கள் சேர்ந்து தான் செயற்படுகின்றோம் எனக் கூறி என் மீது பாய்ந்தார்கள்.

அவ்வாறு பாய்ந்து மறுகணமே அந்த நிதி விடுவிக்கப்படுவது சம்மந்தமாகப் பேசத் தொடங்கியபோது அவர்கள் இருவருக்குமிடையே பயங்கர வாக்குவாதமொன்று ஏற்பட்டது. அப்போது நான் சொன்ன இழுபறியை அவர்கள் செய்து காட்டினார்கள். அதுதான் இந்த இழுபறி என்று சொன்ன காரணத்தினால் அங்கு இருந்த அலுவலர்கள் எல்லோரும் சிரித்து விட்டார்கள். அது அமைச்சர் மனோ கணேசனுக்கு மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

ஆனால், நாங்கள் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலிலே எவரையும் வெறுப்பது எங்களுடைய நோக்கமல்ல. எவருக்கு எதிராகவும் பகைமை பராட்டுவதும் நோக்கமல்ல. அமைச்சர் மனோ கணேசன் எங்களுடைய விடயங்களிலே மிகவும் ஆக்கபூர்வமாகப் பல காலமாகச் செயற்பட்டு வருகின்ற ஒருவர். அண்மையில் ஏற்பட்ட இந்த விடயங்களைக் காரணமாக வைத்து எங்களுக்குள்ளே ஒரு பகைமை இருப்பதாக நாங்கள் காட்டிக் கொள்வது எவருக்கும் நல்லதல்ல” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *