கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் எச்சரிக்கை!

“யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் இன்று (நேற்று) அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்தோம். அவர்கள் மிகவும் சோர்ந்துபோய் உள்ளார்கள். நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராடினர் எனவும், ஆனால் இன்று நாங்களும் சுதந்திரமில்லாமல் வாழ முடியாமலும் தங்களுக்காகப் போராடும் நிலை காணப்படுவதாகக் கூறிக் கவலைப்பட்டார்கள். எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது.”

– இவ்வாறு நேற்று அநுராதபுரத்தில் வைத்துப் பேட்டியளித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் நடைபவனியை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன் நேற்று நிறைவுசெய்துவிட்டு கைதிகளைச் சந்தித்த பின்னர் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“எங்களுடை நோக்கம் இந்த அரசியல் கைத்திகளின் பிரச்சினையை வெளியுலகிற்கு கொண்டு வரவேண்டும் என்பதே. அதற்காகவே இந்த நடை பயணத்தை ஆரம்பித்து நடந்து வந்திருந்தோம்.

வவுனியா வரையிலும் பொதுமக்களின் ஆதரவு அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், பொறுப்புக்கூற வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் தொடர்புகொண்டு எது, என்னவென்று இதுவரை கேட்கவில்லை.

நாங்கள் யாருக்காக நடந்து வந்தோம்? எதற்காக நடந்து வந்தோம்? என்பதை அவர்கள் அறிந்தும் தெரிந்திருந்தும் என்ன, எதுவென்று கேட்கவில்லை.

எமது வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமாக அரசியல் கைதிகள் விவகாரத்தில் பாரிய குற்றத்தைச் செய்து வருகின்றார்கள். கைதிகள் விடயத்தில் எதுவித கரிசனைகளும் காட்டவில்லை. அவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையே காணப்படுகின்றது.

இதேநேரம் இந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இவ்வாறான பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பது தொடர்பில் தங்களுக்குள் பேசினார்கள் என இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதில்லை.

இதற்கு மாறாக ஜனாதிபதியை ஓரிருவர் போய்ச் சந்திப்பதும், வாக்குறுதிகளை வழங்குவதும், அறிக்கை விடுவதுமாகவே இருந்து வருகிறார்கள்.

அரசியல் கைதிகள் விடயத்தில் 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக கண்டிப்பாகவும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.

நீங்கள் எங்களின் வாக்குகள் மூலம் தான் நாடாளுமன்றம் சென்றீர்கள். நீங்கள்தான் இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும். உங்களால்தான் தீர்த்து வைக்க முடியும். மாறாக எங்களால் போராடி உலகிற்கு தெரியப்படுத்த முடியுமே தவிர, நாங்கள் இதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது.

எங்களது உரிமைகளுக்காகப் போராடிய அந்த உறவுகளை மீட்க ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுங்கள் என்று நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால் தமிழினத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்த துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்படுவீர்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *