மத்திய கிழக்கு நாட்டிலிருந்து அனுப்பிய பணத்தில் 16 இலட்சம் மாயம்! – பதுளை பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; சினிமாப்பாணியில் கொள்ளை

மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் செய்து, தனியார் வங்கியில் வைப்பீடு செய்த பணத்தில், பதினாறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் மாயமாகியமை குறித்து, விசாரணை நடத்துமாறு பொலிஸ் புலனாய்வுப்  பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதுளை பகுதியின் மாப்பாகலை பெருந்தோட்டப் பிரிவின் கே.எம்.தேவமலர் மற்றும் அவரது கணவர் ஆகியோர், மத்திய கிழக்கு நாடொன்றில் கடந்த நான்கு வருட காலமாக தொழில் செய்து வருகின்றனர்.

அவர்கள் தனியார் வங்கியொன்றின் பசறைக் கிளையில் பணத்தை சேமித்து வந்துள்ளனர். இப் பணம் “வெஸ்டன் யூனியன்” மற்றும் “மணி கிராம்” ஊடாக  குறித்த வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

மத்திய கிழக்கு நாட்டில் தொழில் செய்து வரும் கே.எம்.தேவமலர், தாம் அனுப்பிய பணத்தை பரிசீலனை செய்யும்படி தனது தகப்பனான தேவதாஸ் கனகராஜிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தாம் நாடு திரும்பியதும், தமக்கென வீடொன்று கட்டப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இதற்கமைய தேவதாஸ் கனகராஜ் மேற்படி வங்கியின் பசறை கிளைக்கு சென்று பரிசீலனை செய்துள்ளார். அவ்வேளையில், தனது மகள் அனுப்பிய சேமிப்பு பணத்தில் பதினாறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாப் பணம் மாயமாகியிருப்பமை தெரிய வந்துள்ளது.

2018ல் ஜுலை மாதம் 10ந் திகதி நான்கு இலட்ச ரூபாவும், அன்றைய தினமே மீளவும் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவும், அதே மாதம் 24ந் திகதி இரண்டு இலட்ச ரூபாவும், 2018ல் ஆகஸ்ட் மாதம் 23ந் திகதி நான்கு இலட்ச ரூபாவும், அதே மாதம் 29ந் திகதி இரண்டு இலட்சரூபா என்ற வகையில் பதினாறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் எம்மைத் தெரியாமல் மீள் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கும்படியும், மீளவும் அப்பணம் வைப்பீடு செய்யப்பட்டு, அதற்கான வட்டியையும் இணைக்குமாறு கேட்டு, மேற்படி வங்கியின் பசறைக் கிளை முகாமையாளருக்கு கடிதம் மூலம் கேட்டுள்ளார்.

இக்கடிதத்தை வங்கியின் பசறைக் கிளை முகாமையாளர்  உத்தியோகப்பூர்வமாக ஏற்றுள்ளதுடன், அவரது முகாமையாளர் இலச்சினை மற்றும் கையொப்பத்துடனான பிரதியொன்றையும் வங்கி முகாமையாளர், வங்கி வைப்பீட்டு புத்தக உரிமையாளரின் தந்தையான தேவதாஸ் கனகராஜிற்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து, தேவதாஸ் கனகராஜ், தம்மையும், தம் குடும்பத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இரா. சலோபராஜாவிடம் முறைப்பாடு செய்தார்.

இம்முறைப்பாட்டின் பேரில், குறிப்பிட்ட வங்கி முகாமையாளருடன் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இரா. சலோபராஜா தொடர்பு கொண்டு வினவிய போது, வங்கி வைப்பீட்டு புத்தகத்தில் பணம் மாயம் குறித்து, பூரண விசாரணைகளை மேற்கொள்வதாகவும், ஏற்பட்டிருக்கும் தவறை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

பதுளை – செல்வராஜா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *