அரசியல் கைதிகள் விடயத்துக்கு புதனன்று தீர்க்க முடிவு! – சம்பந்தனிடம் ஜனாதிபதி உறுதி; அதுவரை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி பேச்சு நடத்தித் தீர்க்கமான -உறுதியான முடிவு ஒன்று எட்டப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

அதுவரை தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபாலவை நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி பின்னர் நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். இதன்போது அங்கு சென்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினர்.

இதன்போது, அரசியல் கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபர், நீதியமைச்சர் ஆகியோருடன் நடந்த சந்திப்புக்களில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்று ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைவரிடம் வினவினார்.

அரசியல் கைதிகளில் இருவர் மாத்திரமே விடுவிக்கக்கூடியதாக இருக்கும் என்றும், ஏனையோருக்கு எதிராக வழக்குகள் உள்ளமையால் அவர்களை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது என்றும், இது தொடர்பில் சட்டமா அதிபரோ, நீதியமைச்சரோ திட்டவட்டமான பதில் எதையும் தரவில்லை என்றும் சம்பந்தன் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.

அத்துடன் அரசியல் கைதிகளில் பலர் 10 வருடங்களுக்கு மேல் சிறையில் உள்ளனர். ஆகவே, இந்த விடயத்தில் பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றும் சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, 10 வருடங்கள் முடிவடைந்தால் அனைவரையும் விடுவிக்கலாம்தானே என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டம் முடிந்த பின்னர் சந்தித்துப் பேசி அரசியல் கைதிகள் விடுதலை குறித்து தீர்க்கமான முடிவு ஒன்றை எட்டுவோம் என ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைவரிடம் நேற்றைய சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த உறுதிமொழியை அடுத்து, உண்ணாவிரதப் போராட்டதை எதிர்வரும் 17ஆம் திகதி வரை கைவிடுமாறு தாம் நேற்று மாலையே அரசியல் கைதிகளைத் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார் எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *