அரசியல் கைதிகள் விவகாரத்தில் பட்ஜட்டைப் பயன்படுத்தி பேரம் பேசவேண்டும் கூட்டமைப்பு! – விக்கி உள்ளிட்ட பலதரப்பும் வலியுறுத்து

“தமிழ் அரசியல் கைதிகளை வெளியே விடா விட்டால் நாம் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவித்தால், கைதிகள் விடுதலை விடயத்தில் நிச்சயமாக நன்மை பயக்கும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு இடையே நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலிலேயே மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்ததாவது:-

“அரசியல் கைதிகள் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றுக்கு உள்ளேயும், வெளியேயும் நாம் பேசி வருகின்றோம். இதுதான் உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை ஏற்க முடியாது.

இன்று (நேற்று) முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பரிசீலிக்க வேண்டும். வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட முன்னர் அரசிடம் இருந்து உத்தரவாதம் பெறப்பட வேண்டும். அழுத்தங்களை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் கூட்டமைப்புக்குக் கூறுவேன்” – என்றார்.

மேலும், 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பேன் என்று என்னால் கூற முடியாது. அது கட்சியின் முடிவை ஒட்டியது. எனது விருப்பம் எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதேயாகும்” என்று குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தாவது:-

“அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள். அரசு இதை ஒரு பயங்கரவாதப் பிரச்சினையாக ஒரு சட்டப் பிரச்சினையாக பார்ப்பதைத் தவிர்த்து அரசியல் பிரச்சினை அரசியல் கைதிகளின் பிரச்சினை என்ற வகையில் அரசியல் ரீதியில் அணுக வேண்டும். நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரவிருக்கும் பாதீட்டில் பேரம் பேசி அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்து அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்” என்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சக்திவேல் இது தொடர்பாகத் தெரிவித்தாவது:-

“அனைத்துப் பிரச்சினைகளிலும் நாங்கள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம். நாம் தொடர்ந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்குப் போராட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரையும் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகாதுவிடின் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அடுத்த மாதம் நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்போது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் மயப்படுத்தப்பட்ட பெரிய சக்தியாக நாங்கள் எழுந்து நிற்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *