திருமலையை எந்த நாட்டுக்கும் தாரைவார்க்க இடமளியேன்! – அமைச்சர் அர்ஜுன திட்டவட்டம்

“நான் ஒருபோதும் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்கமாட்டேன். திருகோணமலையை எந்த நாட்டுக்கும் தாரைவார்க்க இடமளிக்கமாட்டேன். இந்த நாட்டைக் காட்டிக்கொடுக்கவோ, வளத்தை விற்பதோ எனது கொள்கையாகாது. எனது நோக்கமானது எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதேயாகும்.”

– இவ்வாறு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றிய ஊழியர்களில் அரசியல் பழிவாங்களுக்குள்ளான ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவின் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பனை செய்வது தொடர்பான கருத்துக்குப் பதில் கூறும் வகையிலேயே பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தமது கருத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் தவறு செய்திருந்தால் அதனைத் திருத்தவே முயற்சி செய்கின்றோம். கடந்த ஆண்டு சிறந்த முறையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நிர்வகித்துள்ளோம். பதவிக்கு வந்த பிறகு கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்று வந்த முறைகேடுகளை நிறுத்தியுள்ளோம்.

குறிப்பாக, தரமற்ற எரிபொருள் கலப்பு மற்றும் டீசலில் மண்ணெண்ணெய் கலப்பதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை விற்பது தொடர்பாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

நானும் எனது அமைச்சின் செயலாளரும் இதுபோன்ற பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். எங்களால் மற்றவர்களின் விருப்பத்திற்கிணங்க செயற்பட முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *