போதநாயகியை கொடுமைப்படுத்தி சாகடித்தார் செந்தூரன்! – பெற்றோர் கதறல்; நீதி வேண்டி சட்டமா அதிபருக்குக் கடிதம்

“எமது மகள் போதநாயகி, செந்தூரனை திருமணம் முடித்த நாளில் இருந்து சித்திரவதைக்குள்ளாகி வந்தார். போதநாயகியிடமிருந்து பணம் எல்லாவற்றையும் செந்தூரன் கொள்ளையடித்துவிட்டார். இறுதியில் எங்கள் பிள்ளையை கொடுமைப்படுத்தி சாகடித்துவிட்டார் செந்தூரன். எனவே, போதநாயகியின் மரணம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும். சட்டமா அதிபரும் நீதிமன்றமும் எங்கள் பிள்ளையின் மரணத்துக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.”

– இவ்வாறு கதறியழுதவாறு கோரிக்கை விடுத்தனர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரான போதநாயகியின் பெற்றோர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் சட்டமா அதிபருக்கான கடிதத்தை, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்த போதநாயகி, திருகோணமலை கடற்கரையில் கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

போதநாயகி தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது இதுவரை தெரியவராத போதிலும் அவரின் உயிரிழப்புக்கு கணவரான கவிஞர் வன்னியூர் செந்தூரனே காரணம் என சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

இந்தநிலையில், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வவுனியாவிலுள்ள போதநாயகியின் வீட்டுக்கு நேற்று நேரடியாகச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அனந்தி சசிதரனிடம், போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் அவரது பெற்றோர் எடுத்துக்கூறினர்.

விரிவுரையாளரான போதநாயகியின் மரணத்துக்கு அவரது கணவரான சு.செந்தூரனே காரணம் என்று போதநாயகியின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதன்போது சட்ட மா அதிபரின் மூலமாக விசாரணையைத் தீவிரப்படுத்துமாறு கோரி தனது சார்பில் சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கோரிக்கை கடிதம் ஒன்றையும் அனந்தி சசிதரனிடம் போதநாயகியின் பெற்றோர் கையளித்தனர்.

போதநாயகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் திருகோணமலை பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *