437 பிரேரணைகள், 19 நியதிச் சட்டங்கள் நிறைவேற்றியுள்ளது வட மாகாண சபை!

வடக்கு மாகாண சபையின் ஐந்து வருட காலப் பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிச் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

இதில் வருடாந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டங்கள் மற்றும் உப குறைநிரப்புச் சட்டங்கள் எல்லாம் உள்ளடக்கப்படவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால் 29 நியதிச் சட்டங்கள் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரேரணைகளைப் பொறுத்த வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்துக்கு அனுப்பப்பட்ட பிரேரணைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் எங்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியதாகக் கிட்டத்தட்ட 6 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை எல்லாமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அதைவிட வேறு பல முக்கியமான பிரேரணைகள் – அதாவது காணிகள் ஆக்கிரமிப்பு, காணிகள் விடுவிப்பு, இராணுவக் குடியிருப்புக்கள், கைதுகள், அரசியல் கைதிகளின் விடுவிப்பு. நீர் விநியோகம், குடிதண்ணீர் சம்பந்தமான பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதிலும் இறுதியாக நிறைவேற்றப்பட்ட பாலியாற்றுக் குடிதண்ணீர்த் திட்டம் எதுவித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட பிரேரணை. முதலமைச்சரின் வழிமொழிதலுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானமாக அது இருக்கின்றது. எதுவித தடங்கலுமின்றி அந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என நினைக்கின்றேன். அடுத்த வருடத்தில் இந்தத் திட்டம் நிறைவடைவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *