அரசியல் கைதிகள் விடுதலைக்கு அநுராதபுரம் சிறை நோக்கி யாழ்.பல்கலை மாணவர்கள் நடைபவனி!

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை அரசு எடுக்க வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நடைபவனி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுத் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் முடிவிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“அரசியல் கைதிகளின் விவகாரம் ஒரு சட்ட விவகாரம் அல்ல. அது ஓர் அரசியல் விவகாரம். எனவே, அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாகப் பார்க்குமோர் சட்டக் கட்டமைப்புக்குள் நின்று அதைச் சட்ட விவகாரமாக அணுகக்கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுகவேண்டும். இது தொடர்பில் அரசு ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யவேண்டும்.

இதனை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிளிநொச்சி – வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபயணம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அனைத்துத் தமிழ் சமூக ஆர்வலர்களையும் இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *