இன்றும் நாளையும் அடைமழை தொடரும்! பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

கடும் மழை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, அகலவத்த, மத்துகம, பதுரலிய, இங்கிரிய ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த முதலாம் திகதி முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது எனவும், ஒருவர் காணாமல்போயுள்ளார் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த இயற்கை அனர்த்தங்களில் 12 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஆயிரத்து 350 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை, மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. அத்தோடு, 1,668 இற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

உயிரிழந்த 9 பேரில் 6 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார்கள். இவர்களில் நான்கு பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஏனையவர்களில் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் அடங்குகின்றனர் என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அடைமழையால் களுத்துறை, காலி, கொழும்பு மாவட்டங்களில் கூடுதல் பாதிப்பு இடம்பெற்றுள்ளது. சொத்துக்களும் சேதமடைந்துள்ளன. சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் வரையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாவை வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *