பிணைமுறி மோசடி விவகாரம்: சந்தேகநபர் பட்டியலிலிருந்து தப்பினார் ரவி!

பிணைமுறிகள் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை சந்தேகநபராகப் பெயரிடுவது சட்டரீதியானது அல்லவென கொழும்பு பிரதம நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று தீர்மானித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், சம்பவம் தொடர்பில இலங்கை குற்றவியல் தண்டனை சட்டகோவைக்கு அமைய இதுவரை விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை எனப் பிரதம நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக, ரவி கருணாநாயக்கவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை சட்டரீதியற்றது எனவும் பிரதம நீதிவான் அறிவித்துள்ளார்.

இதேவேளை, ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்கவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையின் அறிக்கையைப் பெற்று, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான அனுமதி காணப்படுவதாகவும் பிரதம நீதிவான் அறிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருக்குப் பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *