ஓய்வூதிய வயதெல்லை விரைவில் மாற்றப்படும்! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

ஓய்வூதியர்களுக்கான வயதெல்லை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.

வடக்கு மாகாண ஓய்வூதியர் தின நிகழ்வு யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஓய்வூதியம் உரிமையா அல்லது சலுகையா என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது. இதனை முன்வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போன்று தென்படுகின்றது. இவ்வாறான நிலையில் சம்பளம் பெறுவது உரித்து. ஆனால், ஓய்வூதியம் பெறுவது சலுகை என்று ஒருவர் சொல்லிவிட்டார்.

வரிச் சலுகையில் வாகனம் பெறுவது சலுகை, அது உரித்து அல்ல என்ற சர்ச்சையில் இருந்து எழுந்த இன்னொரு சர்ச்சை இது. இது சம்மந்தமாகப் பொது வெளியில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. அதேபோன்று ஓய்வுபெறும் வயது குறித்து எங்கள் நாட்டில் மீளாய்வு நடைபெற்று வருகின்றது.

நான் இரண்டு வகையான தொழில்களிலே ஈடுபட்டிருக்கின்றேன். அந்த இரண்டு தொழில்களிலும் ஓய்வுபெறுவதற்கு வயதெல்லை கிடையாது. சட்டத்தரணிகளுக்கு ஓய்வு வயது கிடையாது. எனது இரண்டாவது தொழிலான அரசியலிலும் அரசியல்வாதிகளுக்கு ஓய்வுபெறுவதற்கான வயதெல்லை கிடையாது.

ஆனால், அரச ஊழியர்களுக்கு அறுபதை எய்தியவுடன் ஓய்வுபெற வேண்டுமென்பது ஒரு நியதி. அவர்களுடைய அந்த வயதிற்குப் பிறகு மிகவும் திறம்படப் பல துறைகளில் செயற்பட்டிருந்தாலும் கூட ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யாமல் இருக்கலாம். ஆனால், இந்த வயதெல்லை மிக விரைவிலே மாற்றியமைக்கப்படுமென நினைக்கிறேன்.

ஓய்வுபெற்றவர்களை எப்படியாக ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்தலாம் என்று நினைத்துச் செயலாற்ற வேண்டிய தருணம்தான் இது. அதேபோன்று இன்னும் பல வகையில் ஆக்கபூர்வமான செயலாற்றல்களைக் கொண்டிருக்கின்றவர்களும் அதனைச் செய்யாமல் சமூகத்திற்கு அந்தத் தொண்டைக் கொடுக்க முடியாமல் இருப்பது துரதிஸ்டவசமான ஒரு நிலைப்பாடு.

ஆகையினால் வயதெல்லையைக் கூட்டுகின்ற அதே நேரத்தில் ஏற்கனவே ஓய்வுபெற்றவர்கள் அவர்களது துறைகளிலே ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவது நல்லது ஏன்று நாங்கள் நினைக்கின்றோம். அதற்கன செயற்திட்டங்களை பல்வேறு மட்டங்களிலே செய்வது நல்லது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *