கிங்மேக்கர்’கள் என புகழப்படும் ஆசிரியர்கள் குறுக்கு வழியில் பயணிக்ககூடாது!

கல்வி கண் திறக்கும் கடவுளாகவும், கல்வி அமுதூட்டும் தாயாகவும், ‘கிங்மேக்கர்’களாகவும் சமூகத்தால் பார்க்கப்படும் – போற்றிப்புகழப்படும் ஆசிரியர்கள் தமது பணியை ஒருபோதும் அரசியல் மயப்படுத்தக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கண்டி, பன்விலை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
“ கல்விப்புரட்சியின் மூலம் சமூகமாற்றத்தையும், முன்னேற்றத்தையும் இலகுவில் எட்டிவிடலாம். எனவே, தமது பணியின் – பதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆசிரியர்கள் தியாக மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற முன்வரவேண்டும். இக்கோட்பாட்டை மீறாது செயற்படும் ஒவ்வொரு ஆசானும் சமூகப்போராளிதான். அவ்வாறானவர்களை நிச்சயம் நாம் பாராட்டவேண்டும்.
கல்விக்கு எல்லை கிடையாது. நாளாந்தம் ஆசிரியர்கள் தம்மை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியையும், விரிவுரையையும் வழங்கக்கூடியதாக இருக்கும். ஏதோ காலையில் வந்தோம், பாடசாலை முடிந்ததும் வீட்டுகு போய் ஓய்வெடுப்போம் என்ற மனோநிலையில் ஆசிரியர்கள் செயற்படுவாரகளால் அதை சமூகவிரோதச்செயலாகவே கருதவேண்டும்.
அதேவேளை, ஆசிரியர்களாக இருந்தால் என்ன, உயர்மட்ட கல்வி அதிகாரிகளாக இருந்தால் என்ன, பதவி உயர்வு என்பதை குறுக்குவழியில் பெற்றுக்கொள்வதற்கு ஒருபோதும் முயற்சிக்ககூடாது. திறமையை வெளிப்படுத்தி, தகமையை விருத்திசெய்துகொண்டு முன்னோக்கிச்செல்ல முயற்சிக்கவேண்டும்.
ஆனால், இன்று சில ஆசிரியர்களும், அவர்களுக்கு அடுத்தநிலையிலுள்ள கல்வி அதிகாரிகளும் அரசியல்வாதிகளுக்கு வால்பிடித்து, அரசியல் அழுத்தத்தின் ஊடாக உயர்நிலைக்கு வருகின்றனர். இது எமது சமூகத்துக்கு பெரும் சாபக்கேடாகும். அதுமட்டுமல்ல, திறமையான அதிகாரிகளுக்கும் இத்தகையவர்களின் செயற்பாடுகளால் பெரும் அவமதிப்பு ஏற்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும். நிச்சயம் மாற்றியமைக்கப்படும் என்பதை இவ்விடயத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.
பாடசாலைகளுக்கு வளங்களை கேட்டால் மாத்திரம்போதாது, சிறந்த கல்வி அறுவடையை அப்பாடசாலை வெளிப்படுத்த வேண்டும். அதற்குரிய வழிகாட்டலை அதிபரும், ஆசிரியர்களும் வழங்கவேண்டும். அப்போதுதான் கல்வி அமைச்சிடம் பேரம்பேசக்கூடிய பலம் எமக்கு கிடைக்கும்.
மலையகத்திலுள்ள ஆசிரியர்களுக்கும், உதவி ஆசிரியர் நியமனம் பெற்றுள்ளவர்களுக்கும் இந்தியாவிடன் உதவியுடன் பயிற்சி வழங்கி, தொழில்சார் தகைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், மேலும் பல திட்டங்களும் விரைவில் முன்னெடுக்கப்படும்” என்றார் வேலுகுமார் எம்.பி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *