ஊவாவில் தமிழ்க் கொலை – உயிர்கொடுக்க அரவிந்தகுமார் அதிரடி நடவடிக்கை

ஊவா மாகாணத்தின் பிரதான திணைக்களமொன்றின்,  திணைக்கள கடிதத் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொனிப்பொருளின் தமிழாக்கத்தில் தமிழ்க் கொலைகள் இடம்பெற்றுள்ளன.


அக் கடிதத்தலைப்பில் சிங்கள மொழியில் “நல்லாட்சி ஊடாக மேன்மையான உள்ளுர் ஆட்சி” என்ற கருத்துப்படி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதனை தமிழ்மொழியில் ” உள்ளுர் ஆட்சி சிறந்து மூலம் கவர்னன்ஸ்;” என்று பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது விடயம் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து,  அவர் உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு தமிழ் மொழியில் ஏற்பட்டிருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டி அவசரக் கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.


அக்கடிதத்தின் நகல்கள் அமைச்சர்களான மனோ கணேசன், பைசல் முஸ்தபா மற்றும் ஊவா மாகாண ஆளுனர் ஆரிய பி. ரெக்கவ, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அக்கடிதங்களில்

“ஊவா மாகாணத்தில் பிரதான அரச திணைக்களமாக இருந்து வருவது உள்ளுர் ஆட்சி மன்ற திணைக்களமாகும். அத் திணைக்கள கடிதத் தலைப்புக்களில் குறிப்படப்பட்டிருக்கும் தொனிப்பொருள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சரியாகவும்,  தமிழ் மொழி பெயர்ப்பில் பிழையாகவும் இருந்து வருகின்றது. இதனை எம்மால் எவ்வகையிலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது. ஏற்பட்டிருக்கும் இப் பிழை கண்டனத்திற்குரியதாகும்.

குறிப்பிட்ட தொனிப் பொருள் தமிழாக்கம், எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

சிங்களமும்,  தமிழும் அரச மொழிகளாக இருந்து வருவதினால், தமிழ் மொழி பெயர்ப்பினை பிழையன்றி குறிப்பிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

குறிப்பிட்ட கடிதத் தலைப்பின் தமிழ்மொழி பெயர்ப்பை “நல்லாட்சி ஊடாக மேன்மையான உள்ளுர் ஆட்சி” என்று குறிப்பிடுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” என்ற குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *