இ.தொ.காவின் ‘மெகா’ ஊழல்கள் விரைவில் அம்பலமாகும்! – செந்திலின் தந்தையை விளாசித் தள்ளுகிறார் திகா

மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றாலும் தொண்டமான் என்ற நாமத்தை உச்சரிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ,தொண்டமான் குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் இலஞ்சம் வாங்கி கைதுசெய்யப்பட்டதையடுத்து தொண்டமான் என்ற பெயரை மூடிமறைத்துள்ளனர் – என்று அமைச்சர் பழனி திகாம்பரம் விளாசித் தள்ளியுள்ளார்.

நுவரெலியா கந்தப்பளை கோரட்லோஜ் தோட்டத்தில் அமையப்பெற்ற “பாக்கியம் புரம்”, போட்சூட் தோட்டத்தில் “மோத்தாபுரம்” ஆகிய தனிவீட்திடுத்திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.


அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மாகாண சபை உறுப்பினர் ஆர்,ராஜாராம், சோ. ஸ்ரீதரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வி.புத்திரசிகாமணி பிரதேச உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய திகாம்பரம் மேலும் கூறியதாவது,
“ தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தலைவராக பதவி வகித்துக் கொண்டு இலஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள போது கே. முத்துவிநாயகம் என்று மட்டுமே வெளியே சொல்லுகிறார்கள்.

அவரது மகன் பெயர் செந்தில் தொண்டமான் என்றால் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெயர் முத்து விநாயக தொண்டமான் என்றுதானே இருக்க வேண்டும்? இதுவரை அவர்கள் குடும்பத்தில் இருந்து வந்த அனைவர் பெயருக்கு பின்னாலும் தொண்டமான் என பெயர் போட்டு கொள்ளுவது “தில்” என கூறியவர்கள் செந்தில் தொண்டமான் தந்தைதான் முத்துவிநாயகத் தொண்டமான் என கூறுவதற்கு “தில்” இல்லாமல் போனது ஏன்?

அட்டனில் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரியை தொண்டமான் பவுண்டேசன் இடம் இருந்து நேரடியாக எனது அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி அளித்தபோது அதன் ஆரம்ப பெயரான பூல்பேங்க் பெயரை நாங்கள் பயன்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.

இந்தியாவுக்கு சென்று அரசியல்வாதிகளிடம் முறையிட்டு அவர்களது குடும்ப பெயரை களங்கப்படுத்தியதாக பிரச்சாரம் செய்தார்கள். அப்படி அங்கலாய்த்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தற்போது தனது தந்தை முத்துவிநாயகம் தொண்டமான் செய்த காரியத்தையும் இந்தியாவில் போய் சொல்லவேண்டும் .

இதையெல்லாம் கேள்விப்பட்டால் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆன்மா என்னவாகும்? தான் வளர்த்துவிட்ட கட்சியும் அரசியலும் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை எண்ணி நெஞ்சு வெடித்து இறந்திருப்பார். தொண்டமான் பவுண்டேசன் ஊழல் தொடர்பாகவும் நாங்கள் இதனையே வலியுறுத்துகின்றோம்.

இந்தியாவுக்கு ஜல்லிக்கட்டுக்கு கால்நடைகளை விளையாட்டுக்கு அழைத்து செல்லும் அதே வீரத்தை இங்கே இலங்கை கால்நடைகளை வைத்து செய்துள்ள வீர விளையாட்டுகளையும் சொல்ல வேண்டும்.

பயிற்சி நிலைய பெயர்மாற்ற விவகாரத்தையும், தொண்டமான்கள் ஜல்லிக்கட்டுக்கு போவதையும் பெரிது படுத்தி எழுதும் ஊடக நண்பர்கள் இத்தகைய செய் திகளையும் தயங்ககாமல் வெளியிட முன்வரவேண்டும்.

தொண்டமான் பவுண்டேசன் பணிப்பாளராக இருந்த லோகநாதன் கடந்த மாதம் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போதும் இவ்வாறே மூடி மறைக்கப்பட்டது. உண்மைகளை வெளியே கொண்டுவர ஊடகங்கள் தயங்க கூடாது. எதிர்வரும் நாட்களில் இப்படி பல விடயங்கள் அம்பலத்துக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

 

பத்தனை நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *