சிவில் உடையில் வந்தோரால் அரியாலையில் துப்பாக்கிச்சூடு! – உழவு இயந்திரங்களுடன் சாரதிகள் தப்பியோட்டம்

யாழ். அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவில் உடையில் நின்றிருந்த இருவர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரங்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். உழவு இயந்திரங்களுடன் சாரதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

சிவில் உடையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தமக்குக் கிடைக்கவில்லை என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.

மணியந்தோட்டம் பகுதியில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி சிவில் உடையில் நின்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தார். நீண்ட விசாரணைகளின் பின்னர், விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில், சிவில் உடையில் நின்றிருந்தோர் நேற்றைய தினமும் அதே பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மணியந்தோட்டப் பகுதியில் கள்ள மணல் ஏற்றி வரும் செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இரண்டு உழவு இயந்திரங்கள் மணலுடன் நேற்று மாலை 5.30 மணியளவில் அந்தப் பகுதியால் வந்துள்ளன. சிவில் உடையில் நின்றவர்கள் உழவு இயந்திரத்தை மறித்துள்ளனர். உழவு இயந்திரங்களை நிறுத்தாமல் சாரதிகள் செலுத்திச் செல்லவே, வானத்தை நோக்கி மேல் வெடி வைக்கப்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதன் பின்னர் உழவு இயந்திரங்களை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் உழவு இயந்திரங்களுடன் சாரதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உறுதியான தகவல் இதுவரையில் கிடைக்கவில்லை.

இதேவேளை, அரியாலையில் கள்ள மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் இரண்டை நேற்றுமுன்தினம் பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *