வடக்கில் அத்தியாவசிய உணவுபோல் ஆகிவிட்டது கேரள கஞ்சா! – வடிவேல் ஆதங்கம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கேரள கஞ்சாவின் பாவனை அதிகரித்துவிட்டதாகவும், இருமாகாணங்களுக்கும் இது பெரும் சாபக்கேடாக அமைந்துள்ளது என்றும் வடிவேல் சுரேஸ் எம்.பி. தெரிவித்தார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு,  ஆசிரியர் தின நிகழ்வு 06.10.2018 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பவானி ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அதிதியாக கலந்துகொண்டு, பாடசாலையின் கட்டிடத்திற்கு நிதி தொகையினையும், ஆசிரியர்களுக்கான நினைவு பரிசில்களையும் வழங்கி வைத்தார். இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கும், தடுப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண சபைகளின் உறுப்பினர்களும் சபை கூட்டங்களில் தடுமாறுகின்றனர்.

இந்த பாவனை வடக்கில் அத்தியவசிய உணவு போல் பழகிவிட்டது. மலையக மக்கள் எவ்வாறு கோதுமை மாவில் ரொட்டியை ஆரம்ப உணவாக உட்கொள்கிறார்களோ அதேபோல் வடக்கில் கஞ்சாவின் பாவனை அதிகரித்துள்ளது.

இதேபோல் மலையகத்திலும் இவ்வாறான நிலை உருவாகும் என அச்சமாக உள்ளது. போதைபொருளின் பாவனை மலையகத்தில் அதிகரித்து விட்டால் போதைபொருள் பழக்கத்திலிருந்து மலையகத்தை மீட்டெடுப்பது பாரிய கஷ்டமாகும்.

இதேபோன்று பதுளையில் போதைபொருள் பாவனை ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆண் பிள்ளைகள் மட்டுமில்லாமல் பெண் பிள்ளைகளும் போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.

பதுளையில் உள்ள பிரபல பாடசாலைகளில் இவ்வாறான போதைபொருள் பாவனை காணப்படுவதாக நான் அறிந்தேன்.

இதனால் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்களும் சரி, வீட்டில் பெற்றோர்களும் சரி பிள்ளைகளின் கல்வி தொடர்பிலும், அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதற்கு நாம் ஒருபோதும் துணையாக இருக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *