புலமைப்பரிசில் பரீட்சைக்காக பிள்ளைகளை வதைக்காதீர்! ஜனாதிபதி கோரிக்கை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரேயொரு தடை தாண்டல் பரீட்சை என்று பெற்றோர்கள் நம்புகின்ற காரணத்தினால் நாட்டின் சிறுவர் தலைமுறை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

கண்டி முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (06) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்து கடந்த காலங்களில் நாட்டின் பிள்ளைகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இது பற்றி அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி , ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் உன்னதமான பணியை பாராட்டினார்.

இலவசக் கல்வியின் மூலம் சமூகத்திற்கு பயனுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பை பாராட்டிய ஜனாதிபதி;, ஆசிரியர் தொழிலின் உரிமைகள், சலுகைகளை வெற்றி கொள்வதற்கும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த கௌரவத்தை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதிக்கு மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்தையும் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்தையும் ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.

கல்லூரியின் 2017ஆம் ஆண்டில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசல்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க, கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.தேசப்பிரிய ரத்நாயக்க உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *