கொழும்பு குப்பை புத்தளத்துக்கா? – மு.கா. போர்க்கொடி

கொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை மறுபரிசீலித்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும்.
புத்தளம் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதுதான் இதற்கான பரிகாரமாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அருக்காடு பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக புத்தளம் மக்கள் 7 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் நடாத்திவரும் நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் முதலாவது அரசியல்வாதியாக நேற்றிரவு (05) மக்களின் போராட்டக் களத்துக்கு நேரடியாக விஜயம் அங்குள்ளவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்துகொண்டார்.
அதன்பின்னர் புத்தளம் நகரசபை மண்டபத்தில் நகரபிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்திலுள்ள அருவக்காடு எனும் பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிராக புத்தளம் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இதன் பாரதூரத்தை அறிந்து, அவசரமாக கையாளவேண்டிய ஒரு கடப்பாடு இருக்கின்ற காரணத்தினால் நான் இங்கு வந்திருக்கின்றேன்.
சூழலுக்கும், எதிர்கால சந்திதியினருக்கும் அச்சுறுத்தலாகவுள்ள இத்திட்டத்துக்கு எதிராக கட்சி, இன, மத பேதங்களுக்கு அப்பால், புத்தளம் மக்கள் அனைவரும் ஏகோபித்த அடிப்படையில் சத்தியாக்கிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையை யாரும் மூடிமறைத்து அரசியல்செய்ய முடியாது.
சில மாவட்டங்களில் குப்பைகளை சொந்த மாவட்டத்திலேயே கொட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கொழும்பிலுள்ள குப்பையை 80 மைல் தூரம் கடந்துவந்து புத்தளத்தில் கொட்டுவது என்பது நியாயமற்றது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.
இக்குப்பைகளை அருவக்காட்டில் கொட்டுவதற்கு தனியான புகையிரதம், இயந்திரம் போன்வற்றை கொள்வனவு செய்வதற்கு தற்போது கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டி வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில், அதன் திட்டப் பணிப்பாளருடன் நான் கதைத்தேன். மீதொட்டமுல்ல குப்பைகளை அருவக்காட்டில் கொட்டிவிட்டு, அதன்பின் சேகரிக்கப்படும் குப்பைகளை பிறிதொரு இடத்தில் கொட்டுவதாகத்தான் ஆரம்பத்தில் பேசப்பட்டது என்ற விடயத்தை அவரிடம் சொன்னேன்.
இல்லை, கொழும்பில் தினமும் சேகரிக்கப்படும் 120 டொன் குப்பைகளை அருவக்காட்டில் கொட்டுவதற்கான திட்டம் 2014 முதல் போடப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள்தான் தற்போது நடைபெற்றுவருவதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தினால்தான் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது மாத்திரமின்றி சம்பந்தப்பட்ட அமைச்சர் புத்தளத்துக்கு சென்றபோது பேசிய சில விடயங்களும் அங்குள்ள மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளன. இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் அரசியல் ரீதியான முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும்.
இத்திட்டம் தொர்பில், அதன் பின்னணிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குவதற்கு எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகைதருமாறு சம்பந்தப்பட்ட பணிப்பாளருக்கு நான் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். அவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை கைவிடுவதில் ஐக்கிய தேசியக் கட்சியினர் அசிரத்தையாக இருப்பாக இங்குள்ள அரசியல்வாதிகள் சொல்கின்றனர். ஆனால், நாட்டின் தலைமைகள் இதை அவ்வாறு கையாளமுடியாது. இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் மேலிடத்துக்கு கொண்டுபோக வேண்டும். அதற்காக எங்களுடன் சினேகபூர்வ கட்சிகளுடன் இதன் பாரதூரம் பற்றி பேசவிருக்கின்றோம்.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எங்களது அனைத்து பலத்தையும் பிரயோகித்து, மாற்று நடவடிக்கைளை மேற்கொள்வதற்கான அழுத்தங்களை கொடுப்போம். இதற்கான நிரந்தரத் தீர்வு கிட்டும் வரை உங்களது பேராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *