விக்கியின் அடுத்தகட்ட நகர்வு என்ன? – அவரிடமே நேரில் துருவியது அமெரிக்கா

மக்கள் இயக்கம் ஒன்றை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து அதனை முன்னெடுத்துச் செல்வதுதான் எனது உத்தேச நிலைப்பாடு என்று அமெரிக்காவிடம் எடுத்துரைத்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் றொபேர்ட் கில்ரன், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போதே அவர் இதனை அமெரிக்கத் துணைத் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

அமெரிக்கத் துணைத் தூதுவருடனான சந்திப்பு குறித்து வடக்கு முதலமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“எனது அடுத்த கட்ட நிலைப்பாடு என்ன? என்று அமெரிக்கப் பிரதிநிதி கேட்டார். இப்போதைக்குத் தேர்தல் வரும் என நான் நினைக்கவில்லை என்றேன். அவரும் அதனை ஒத்துக்கொண்டார். தேர்தல் உடனே வரும் என்று தாங்கள் நினைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் இயக்கம் ஒன்றை வலுப்படுத்தி மக்களுடன் சேர்ந்து அதனை முன்னெடுப்பதே எனது உத்தேசம் என்று கூறியிருக்கின்றேன். அதனை அவர் வரவேற்றார்.

மக்கள் பிரதிநிதித்துவம் சபையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவது நன்மை கிடைக்கும் என்று அவர் கூறினார்.

முதலமைச்சர் பதவியை இழந்த பிற்பாடும் எந்த நேரம் என்றாலும் என்னுடன் வந்து சந்திக்க முடியும் என்ற கருத்தை அவர் தந்தார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *