விரைவில் ஆட்சியைப் பிடிப்போம்! 2 வருடத்துக்குள் தீர்வு காண்போம்!! – மஹிந்த திட்டவட்டம்

“மிக விரைவில் மீள அதிகாரத்துக்கு வருவோம் – வந்ததும் அடுத்த இரண்டு வருடத்துக்குள் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு, தமிழர் மட்டுமல்லர், முழு இலங்கையருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கமான தீர்வு ஒன்றைக் காண்போம். இதனைத் தமிழ் மக்களுக்கான செய்தியாக விடுக்க விரும்புகின்றோம்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நேற்றுக் காலை கொழும்பில் ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இந்தச் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் ‘காலைக்கதிர்’ நாளிதழ் ஆசிரியர் என்.வித்தியாதரனுடன் உரையாடிய சமயமே இந்த செவ்வியை அவர் வழங்கியுள்ளார்.

அப்போது அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:-

“யுத்தத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் முதலில் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், அடிப்படைக் கட்டுமானங்கள் குறித்து விசேட சிரத்தை எடுத்துக் கவனித்தோம். அதைத் தொடர்ந்து தேசிய இனப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு காணும் முயற்சியை ஆரம்பிக்க முயன்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நானே அழைத்துச் பேசினேன். ஆனால், இணக்கமாகப் பேசித் தீர்வு காணும் எண்ணத்தில் கூட்டமைப்பினர் செயற்படவில்லை. எனது அழைப்பை உதாசீனப்படுத்தி நடந்து கொண்டனர்.

யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தல், வடக்கு மாகாண சபைக்கான ஜனநாயகபூர்வத் தேர்தலை நடத்துதல் முதலிய ஆக்கபூர்வமான பல சமிக்ஞைகளை நான் வெளியிட்டேன். ஆனால், கூட்டமைப்பினர் அதற்குச் சாதகமான பிரதிபலிப்பைக் காட்டவேயில்லை. அதிகாரத்தில் இருந்தும் எங்களை அகற்றும் திட்டத்துக்கு அவர்கள் துணைபோனார்கள். இப்போது அவர்களுக்கு யதார்த்தம் விளங்கியிருக்கும்.

கைதிகள் பிரச்சினை, காணி விடுவிப்பு, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு காணுதல் எதுவுமே சரிவர நடக்கவில்லை.

வெறும் பேச்சு மட்டும்தான் நடக்கின்றது. இந்த அரசினால் எந்தத் தீர்மானமும் எடுக்க முடியாது. எடுத்த தீர்மானத்தை நடைமுறை படுத்தவும் இயலாது. வெறுமனே பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அதற்கு மேல் எதுவும் நடக்காது என்பது கூட்டமைப்பினருக்கும் இப்போது புரிந்திருக்கும்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு என்ன? அவர் விரும்பியபடி எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அதற்கான பவிசுகளும் அவருக்குக் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவராக அவர் தேசிய பிரச்சினைகளையும் சரிவரப் பிரதிபலிக்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க ஆட்சி முறை பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர். அங்குள்ளமை போன்று சமூகப் பொலிஸ் முறைமையை வடக்கு, கிழக்குக்கு அதிகாரப் பகிர்வாக வழங்குவதற்கு அவர் பரிந்துரைத்திருந்தார். தமிழ்க் கூட்டமைப்பின் ஒத்துழைப்புக் கிடைக்காதமையால் அதைச் செய்ய முடியவில்லை.

விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தகுதியற்ற இந்த அரசு தூக்கியெறியப்படும். நாம் விரைவில் மீண்டும் அதிகாரத்துக்கு வருவோம்.

வந்த கையோடு தமிழ் மக்களின் அன்றாட – உடனடிப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வையும், நிவாரணத்தையும் முன்வைப்போம். கைதிகள் பிரச்சினைக்கு நியாயமான – நீதியான தீர்வு விரைந்து எட்டப்படும்.

மக்களின் காணிப் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரதேச பாகுபாடு போன்ற சிக்கல்களுக்கு ஆக்கபூர்வமான இணக்கத் தீர்வு காணப்படும்.

எட்டப்படும் தீர்வு வெறும் பேச்சில் அல்லாமல் செயலில் நடை முறைப்படுத்தப்படும். அதன் மூலம் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் உறுதி செய்யப்படும். கசப்புணர்வுகளை மறந்து ஒன்றித்துச் செயற்படவும், தேசத்துக்காகப் பணியாற்றவும் முன்வருமாறு எனது தமிழ் சகோதரர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்” – என்று மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *