மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தொண்டமான்?

மத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து ‘புதுச்சுடர்’ இணையத்துக்கு அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பிலேயே நுவரெலியா மாவட்ட எம்.பியொருவர் ஊடாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு தொண்டமான் தரப்பிலிருந்து இன்னும் பச்சைக்கொடி காட்டப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் பலபகுதிகளிலும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இம்மூன்று மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியே கடந்த காலங்களில் ஆதிக்கம் செலுத்திவந்தது.

பெரும்பான்மையின மக்களின் வாக்குகளைப் பெற்றாலும், தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் தமிழர் ஒருவரை முதல்வராக களமிறக்கி – வரலாற்று முக்கியத்துவமிக்க மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கிலும், வாக்குவேட்டை நடத்துவதற்காகவும் தொண்டாவுக்கு மஹிந்த அணி வலைவிரித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியது.

நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோரிக்கைக்கு தொண்டமான் பச்சைக்கொடி காட்டும் பட்சத்தில், அடுத்த பொதுத்தேர்தலின்போது பதுளை, மாத்தளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தேசியப் பட்டியல் ஊடாக இ.தொ.கா. உறுப்பினர்களுக்கு எம்.பி. பதவிகளை வழங்குவதற்கு மஹிந்த அணி தயாராகவே இருக்கின்றது எனத் தெரியவருகின்றது.

தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்குவதற்கு சிக்கல் எனில், மத்திய மாகாணத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தமது அணி தயாராகவே இருக்கின்றது எனவும் தொண்டமான் தரப்புக்கு மஹிந்த தரப்பால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இது தொடர்பில் தொண்டமானிடம் வினவ முற்பட்டாலும் அம்முயற்சி கைகூடவில்லை.

“தேர்தலில் வெற்றிபெற பலகோணங்களில் வியூகம் வகுப்படும். அவை குறித்த தகவல்கள் முன்கூட்டியே வெளியிடமுடியாது” என்று மஹிந்த அணியின் எம்.பி.யொருவர் ‘புதுச்சுடர்’ இணையத்துக்குத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *