கூட்டரசிலிருந்து வெளியேறுவாரா ஹில்புல்லா? வெளிப்படையாகவே தனியாட்சிக் கோரினார்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  கட்சிக்குள் வலுவாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும்,  தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்ய வேண்டுமாயின் சு.க. தனித்து புதிய அரசாங்கமொன்றை அமைப்பதே சிறந்தது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கான காத்தான்குடி மத்திய குழு தெரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அல்-மனார் மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான பேசல ஜயரத்ன கலந்து சிறப்பித்தார். 
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் நோக்குடன் நாடு முழுவதிலும் உள்ள சகல தொகுதிகளுக்குமான மத்திய குழு தெரிவு செய்யப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகள் வேறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் வேறு. இருந்தாலும் இரண்டு கொள்கைகளையும் இணைத்து புதிய நல்லாட்சியொன்றை உருவாக்கினோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூர சிந்தனையுடன் நல்ல நோக்கத்துடனேயே இந்த தீர்மானத்தை எடுத்தார்.
நாட்டில் நிலவிய பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் போன்ற பல காரணங்களுக்காகவே இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. எனினும், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் அந்த இலக்கினை நாங்கள் அடைந்தோமா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் போக்கும் – செயற்பாடுகளும் எமக்கு திருப்த்தியாக இல்லை. அதேபோன்று, ஐ.தே.க. அமைச்சர்கள் சிலரது நடவடிக்கைகளும் – செயற்பாடுகளும் – கொள்கைகளுமே நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், சு.கா. சார்பான அமைச்சர்கள் 16 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி தனியாக செயற்படுகின்றனர். நாங்கள் 23 பேர் இன்னும் ஜனாதிபதியுடன் அரசாங்கத்தில் இருக்கின்றோம்.
இருந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் – போராட்டமும் எமது கட்சிக்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அண்மையில் நடைபெற்ற கட்சி உயர் பீட கூட்டத்திலும் இந்த வாதம் வலுவாக முன்வைக்கப்பட்டது.

நாட்டில் பொருளாதார ரீதியாக தற்போது பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். இதனை சீர்செய்ய இந்த அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையோ – கொள்கைகளையோ முன்வைப்பதாக இல்லை.

ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.
தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியுடன் பயணிக்காமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியான ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். எம்மை விட்டு பிரிந்த சகல தரப்புக்களையும், சிறுபான்மைக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எவ்வளவு விரைவாக அதனைச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்ய வேண்டும். அதற்காகவே நாடாளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *