யாழ். பல்கலையில் மாணவிகள் மீது பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்! – மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைளை முன்னெடுக்கத் தவறுகின்றது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“யாழ். பல்கலைக்கழக மாணவர்களாலும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பல்கலைக்கழகத்துக்குள் நடந்திருக்கின்றன. ஆனால், அதற்குரிய முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் தப்பித்துச் செல்லக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

குறிப்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் இவ்வாறு மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதேபோன்றதொரு குற்றச்சாட்டு அந்தப் பேராசிரியர் மீது கடந்த பல வருடங்களுக்கு முன்னரும் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையிலையே இத்தகைய இழிவான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையாலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென நாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் நிர்வாகத்துக்கும் மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் பேரவைக்கும் தெரியப்படுத்தியும் முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலைமை தற்போதும் காணப்படுகின்றது.

இவ்வாறு விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதால் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் தண்டணைகளுக்குள்ளாகாமல் தப்பித்துச் செல்லும் நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலைமைகள் தொடர்வது எமக்கு மிகுந்த மனவேதனையையே ஏற்படுத்துகின்றது. ஆகவே, பல்கலைக்கழக நிர்வாகம் இதனை மூடி மறைக்க முயலாது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *