பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்

பெருந்தோட்டப் பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அடிப்படை வசதிகள் சகிதம் உரிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், இதுவிடயத்தில் சிறுவர் விவகார அமைச்சும் தலையிட்டு – விசேட கண்காணிப்பு பொறிமுறையொன்றை வகுக்கவேண்டும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியான வேலுகுமார் வலியுறுத்தினார்.

அனைத்துலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தைமுன்னிட்டு கண்டி நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இதுதொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ இன்றைய சிறார்கள்தான் நாளைய தலைவர்கள். எனவே, அவர்களைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் இருக்கின்றது. வருடத்தில் ஒருநாளை மாத்திரம் அவர்களுக்காக ஒதுக்கி, போற்றிப்புகழ்வதில் பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை. தினந்தோறும் சிறார்கள்மீது கழுகுப்பார்வையை செலுத்தி அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.
சிறார்கள் கூட இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதுடன், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும். அவர்கள் வழிமாறிய பின்னர் பதறியடித்துக்கொண்டு திருத்த முற்படுவதைவிட ஆரம்பத்திலிருந்தே அவர்களை நேர்வழியில் பயணிக்க வைப்பதற்கு வழிகாட்டியாக பெற்றோரும், உறவினரும் மாறவேண்டும். இதை சுமையாக கருதினால் எதிர்காலம் என்பது சாபக் கேடாகவே அமையும் என்பது கசப்பான உண்மையாகும்.
இன்றைய சிறார்கள் தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு என அனைத்திலுமே அதீத திறமையை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்களை இச் சமூகமும், அரசும் மேலும் ஊக்கப்படுத்தவேண்டும். இலங்கையிலுள்ள சிறார்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை, மலையகத்திலும் மாற்றம் என்பது படிமுறை ரீதியாக இடம்பெற்றுவருகின்றது. சிறார்களை வேலைக்கு அனுப்புதல், சிறுவர் து~;பிரயோகம் என்பன குறைவடைந்திருந்தாலும் முழுமையாக கட்டுப்பாட்டுக்கு வரவில்லை.
அதுமட்டுமல்ல சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அடிப்படை வசதிகள் அற்றநிலையிலேயே காட்சிதருகின்றன. பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதிலாக எவ்வித முன் அனுபவமும் இல்லாதவர்களே – பராமரிப்பு நிலையங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படுகின்றனர். இதனால், சிறார்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பெருந்தோட்ட பிராந்தியக்கம்பனிகள்தான் தோட்டப்பகுதியிலுள்ள சிறார் பராமரிப்பு நிலையங்களை பாதுகாக்க வேண்டும் என அறிவித்துவிட்டு இதுவிடயத்தில் அரசு நழுவிவிடமுடியாது. மத்திய, மாகாண அரசுகள் உரிய கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக சிறுவர் விவகார அமைச்சு விசேட பொறிமுறையொன்றை வகுக்கவேண்டும்.
பராமரிப்பு நிலையங்களுக்கு பரிசோதனை அதிகாரிகளை அனுப்பி – அங்கு வழங்கப்படும் சத்துணவு, சுகாதார வசதிகள் தொடர்பில் ஆராயவேண்டும்.
அதேபோல், சிறுவர்களை நாம் உரிய வகையில் நெறிப்படுத்தினால் இந்நாட்டில் முதியோர் இல்லங்களே உருவாகியிருக்காது. அவர்களின் பெற்றோரை அவர்களே உரிய வகையில் பராமரித்திருப்பார்கள்.
இன்று பல முதியவர்கள் தள்ளாடும் வயதினும் யாசகம்செய்து வாழ்வை கொண்டுநடத்துகின்றனர். மேலும் சிலர் கவனிப்பாரற்ற நிலையில் மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கின்றனர். முதியோர்களுக்காக நல்லாட்சியின்கீழ் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அவை வரவேற்கப்படக்கூடிய விடயமாகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *