அரசியல் கைதிகள் தொடர்பில் இன்றும் நாளையும் கூட்டமைப்பு முக்கிய பேச்சு!

“தடுப்புக் காவலிலும் சிறைகளிலும் தொடர்ந்து வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருடனும், நாளை புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியமான – தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த புதன்கிழமை சட்டமா அதிபர் நாட்டுக்குத் திரும்பிய உடனேயே பிரதமர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நீதி அமைச்சரும் பங்கேற்றிருந்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும் அரசியல் கைதிகளின் நிலைவரம் தொடர்பில் நானும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும் அவர்களுக்கு விளக்கமளித்திருந்தோம்.

உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அரசியல் கைதிகளை நேரில் சென்று அவர்களின் விவரங்களை நான் எடுத்த காரணத்தினால் ஒவ்வொருவருடைய வழக்கு விவரங்களையும் அரச தரப்புக்கு எடுத்துக் கூறினோம்.

இந்த அரசு பதவிக்கு வந்தபோது, அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு அடிப்படையிலே பலர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று சட்டமா அதிபர் தெரியப்படுத்தினார்.

தற்போது நிலுவையிலுள்ள வழக்குகள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை உடையவை என்றும் அவர் கூறினார்.

அவ்வாறான பாரதூரமான வழக்குகளை துரிமாக நடத்தி முடிப்பதற்காகதான் விசேட நீதிமன்றங்கள் கொழும்பிலும் அநுராதபுரத்திலும் அமைக்கப்பட்டன. அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றிலே வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. அதனால்தான் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மை புனர்வாழ்வுக்கு அனுப்பியாவது விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்திலே ஈடுபட்டுள்ளனர் என்று சட்டமா அதிபரிடம் நாம் எடுத்துக் கூறியபோது, உடனடியாக தாம் ஒரு விசாரணையை நடத்துவதாகச் சட்டமா அதிபர் குறிப்பிட்டார். அவர் விசாரணை நடத்துவதனால் அரசியல் கைதிகளுக்கு எந்தப் பலனும் கிட்டாது என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.

ஆகையினாலே 3 வருடங்களாக அவர்களின் வழக்குகளை இழுத்தடித்தமையால், அவர்கள் 10 வருடங்களுக்கு அண்மித்த காலத்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எந்தவொரு குற்றமும் நிரூபிக்கப்படாத காரணத்தினாலே அவர்களைப் புனர்வாழ்வுக்கு அனுப்பியாவது விடுவிக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.

இது தொடர்பில் இரண்டு அல்லது மூன்று நாட்களிலே முடிவு சொல்வதாக சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். எனினும், கடந்த சனிக்கிழமையுடன் அந்த மூன்று நாட்கள் கடந்துவிட்டன. அதனால் மறுநாள் (நேற்றுமுன்தினம்) ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினேன். அது தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசி முடிவைச் சொல்வதாக அவர் பதிலளித்தார்.

அரசியல் கைதிகள் ஒவ்வொருவருடைய வழக்குக் கோவைகளையும் ஆராய்ந்து அவர்களை விடுவிப்பதை விட அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும் என்று அரச தரப்பிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துக் கூறினார்.

அது சம்பந்தமாக இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நீதி அமைச்சருடைய அலுவலகத்திலே சட்டமா அதிபரும் நானும் நீதி அமைச்சருடன் சந்திப்பு நடத்தவுள்ளோம்.

அரசியல் கைதிகள் ஒவ்வொருவருடைய வழக்கு விடயங்களையும் ஆராய்ந்து அவர்களை எவ்வாறு விடுவிக்க முடியும் என்று பரிசீலிப்பதற்காக இந்தச் சந்திப்பைக் கூட்டுகின்றோம்.

மேலும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் நாம் அரச தரப்புடன் பேச்சு நடத்தினோம். “ஜனாதிபதியுடன் அரசியல் கைதிகள் தொடர்பில் பேசியிருக்கின்றேன். அவர் நாடு திரும்பியவுடன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஆராய்வதாக உறுதியளித்தார்” என்றும் கடந்த புதன்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சம்பந்தன் கூறினார். ஜனாதிபதியுடன் பேசி அந்தக் கூட்டத்தை தான் ஒழுங்கு செய்வார் எனப் பிரதமர் தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பின் பிரகாரமே ஒரு அரசியல் தீர்மானத்தின் மூலம் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். அரசியல் கைதிகளில் 51 பேர் வழக்கு முடிவடைந்து சிறைத் தண்டனை அனுபவிப்பவர்கள். ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதன் ஊடாகவே அவர்கள் விடுதலை பெற முடியும்.

வடக்கு , கிழக்கு அபிவிருத்திச் செயலணி வரும் நாளை புதன்கிழமை மாலை 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் கூடுகின்றது. அதில் நாம் பல விடயங்கள் பற்றிப் பேசவுள்ளோம். இதன்போது அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் நாம் பேசுவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *